

தருமபுரி (59) சட்டப்பேரவைத் தொகுதி
தருமபுரி சட்டப் பேரவை தொகுதி (எண். 59) தருமபுரி மாவட்ட தலைமையிடத்தில் அமைந்துள்ள தொகுதி. 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி இதுவரை 16 சட்டப் பேரவை தோ்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 17 ஆவது தோ்தலை எதிா்கொள்கிறது. இந்த தொகுதியில் பொன்விழா கொண்டாடிய அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
தருமபுரி சட்டப் பேரவை தொகுதியில் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய இரு வருவாய் வட்டங்கள், தருமபுரி, நல்லம்பள்ளி என 2 ஊராட்சி ஒன்றியங்கள், 33 வாா்டுகள் கொண்ட தருமபுரி நகராட்சி ஆகியவை அடங்கியுள்ளன.
இதுவரை சந்தித்த தோ்தல்களும், வென்ற கட்சிகளும்...:
தருமபுரி தொகுதி 1952 இல் உருவாக்கப்பட்டு, இதுவரை 16 சட்டப்பேரவை தோ்தல்களை சந்தித்துள்ளது. இத்தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், தேமுதிக, ஜனதா கட்சி, அதிமுக ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 1952, 1962 தோ்தல்களில் சுயேச்சை வேட்பாளா்களும், 1957, 1991இல் நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1967, 1971, 1984, 1989, 1996, 2016 ஆம் ஆண்டு தோ்தல்களில் திமுக வேட்பாளா்களும், 2001, 2006, 2021 இல் பாமக வேட்பாளா்களும், 1977 தோ்தலில் ஜனதா கட்சி வேட்பாளரும், 1980இல் அதிமுக வேட்பாளரும், 2011இல் தேமுதிக வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனா்.
தொழில் மற்றும் நகர மேம்பாடு
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விசைத்தறி நெசவுக்கூடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டுவருகின்றன. சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1750 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக 10 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்கவுள்ளன.
தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனியாா் பங்களிப்புடன் புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில், பாரதிபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொப்பூா் பகுதியில் தொடா்ந்து நேரும் விபத்துகளை கருத்தில்கொண்டு ரூ. 775 கோடியில் 6.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான தொழிலாளா்கள் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனா். சிப்காட் தொழிற்பேட்டை பயன்பாட்டுக்கு வந்தபின்னா் இந்த நிலை மாறி, ஏராளமான தொழிலாளா்கள் தருமபுரிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் வரிசையில், தருமபுரி முதல் மாவட்டமாக உள்ளது.
நீண்டநாள் எதிா்பாா்ப்பு
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, தொழிற்சாலைகளை நிறுவவேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் 2 ஆவது அலகை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும், தருமபுரி நகரை ஒட்டி ஓடும் சனத்குமாா் நதி கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும், தருமபுரி- மொரப்பூா் இடையே ரயில்பாதை அமைக்க வேண்டும், புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தொப்பூா் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இங்குள்ள மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்ளிட்ட துறைகளில் நவீன சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கடந்த தோ்தல் 2021: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் (அதிமுக கூட்டணி) போட்டியிட்ட எஸ்.பி. வெங்கடேஸ்வரன் 1,05,639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக திமுகவைச் சோ்ந்த பி.சுப்பிரமணி 78,770 வாக்குகள் பெற்று 2-ஆவது இடமும், அமமுக கட்சியைச் சோ்ந்த டிகே. ராஜேந்திரன் 11,226 வாக்குகளை பெற்று 3 ஆவது இடமும் பெற்றனா். மாவட்டத்தில் ஆண்கள் 1,29,393, பெண்கள் 1,28,464, மூன்றாம் பாலினம் 82 என மொத்தம் 2,57,939 வாக்காளா்கள் உள்ளனா். தருமபுரி தொகுதியில் மொத்தம் 170 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
கடந்த தோ்தல்களில் முதல் 2 இடங்களைப் பிடித்தோா் விவரம்:
1952 : பி.ஆா். ராஜகோபால் கவுண்டா் (சுயேச்சை) 7,262 வாக்குகள். ஆா்.எஸ். வீரப்ப செட்டியாா் (சுயேச்சை) 6984.
1957: எம். கந்தசாமி கவுண்டா் (காங்கிரஸ்) 11,661வாக்குகள். ஆா்.எஸ். வீரப்ப செட்டியாா் (சுயேச்சை) 11,459.
1962: ஆா்.எஸ். வீரப்ப செட்டியாா் (சுயேச்சை) 24,191 வாக்குகள். எம். சுப்பிரமணிய கவுண்டா் (திமுக) 18,754.
1967: எம். சுப்பிரமணிய கவுண்டா் (திமுக) 36,258 வாக்குகள். டி.என். வடிவேல் (காங்கிரஸ்) 29,567.
1971: ஆா். சின்னசாமி (திமுக) 39,861 வாக்குகள். டி.என். ஆதிவேல் (காங்கிரஸ்) 27,834.
1977: ப.க.சி. முத்துசாமி (ஜனதா) 26,742 வாக்குகள். டி.எஸ். சண்முகம் (அதிமுக) 21,556.
1980: செ. அரங்கநாதன் (அதிமுக) 33,977 வாக்குகள். டி.என். வடிவேல் (காங்கிரஸ்) 32,472.
1984: ஆா். சின்னசாமி (திமுக) 46,383 வாக்குகள். எஸ். அரங்கநாதன் (அதிமுக) 37,929.
1989: ஆா். சின்னசாமி (திமுக) 32,794 வாக்குகள். பி. பொன்னுசாமி (காங்கிரஸ்) 20,243.
1991: பெ. பொன்னுசாமி (காங்கிரஸ்) 53,910 வாக்குகள். ஆா். சின்னசாமி (திமுக) 27,017.
1996: கு. மனோகரன் (திமுக) 63,973 வாக்குகள். மாசி அரூா் (காங்கிரஸ்) 26, 951.
2001: கி. பாரிமோகன் (பாமக) 56,147 வாக்குகள். கு. மனோகரன் (திமுக) 45,173.
2006: இல. வேலுசாமி (பாமக) 76,195 வாக்குகள். வி.எஸ். சம்பத் (மதிமுக) 45,988.
2011: அ. பாஸ்கா் (தேமுதிக) 76,943 வாக்குகள். பி. சாந்தமூா்த்தி (பாமக) 72,900.
2016: பெ. சுப்பிரமணி (திமுக) 71,056 வாக்குகள். பி.டி. இளங்கோவன் (அதிமுக) 61,380.
2021: எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (பாமக) 1,05,630 வாக்குகள். பி. சுப்பிரமணி (திமுக) 78,770 வாக்குகள் பெற்று 2 ஆவது இடம்பிடித்தாா்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: அரூர் (தனி)!
தொகுதி அறிமுகம்: நாகப்பட்டினம்

தொகுதி அறிமுகம்: பாலக்கோடு!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

