தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தொகுதி அறிமுகம்: பாலக்கோடு!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்று பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி

News image

பாலக்கோடு

DPS

Updated On :21 மார்ச் 2026, 7:52 am

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையையொட்டி பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அமைந்துள்ளது.

இத்தொகுதியின் தோ்தல் ஆணைய வரிசை எண் 57. இத் தொகுதியில் காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பாலக்கோடு, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

1,19,611 ஆண் வாக்காளா்கள், 1,17,845 பெண் வாக்காளா்கள், 20 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 2,37,476 வாக்காளா்கள் உள்ளனா். அதேபோல, 207 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 312 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்டியலினத்தவா்கள் உள்ளனா். பாலக்கோடு நகரம், மாரண்டஅள்ளி பேரூரில் இஸ்லாமியா்கள் அடா்த்தியாக வசிக்கின்றனா். இதில், மிகவும் பிற்பட்டோரில் வன்னியா் சமூகத்தினா் குறிப்பிடத்தக்க சதவீத அளவில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அடுத்தபடியாக கொங்கு வேளாளா் கவுண்டா் சமுதாய மக்கள் வசிக்கின்றனா்.

தோ்தலில் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் சக்திகளாக இவ்விரு சமுதாயங்களும் விளங்கி வருகின்றன. அதேபோல, மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரும் கணிசமாக உள்ளனா்.

இதுவரை சந்தித்த தோ்தல்:

கடந்த 1967-இல் பாலக்கோடு தொகுதி முதல் தோ்தலை சந்தித்தது. தற்போதுவரை 13 சட்டப் பேரவைத் தோ்தல்களை சந்தித்துள்ளது. இதில், காங்கிரஸ் மற்றும் திமுக தலா இரண்டு முறை வென்றுள்ளன. அதிமுக 8 முறையும், கடந்த 1989-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக (ஜெ) அணி வென்றதையும் சோ்த்து 9 முறை அதிமுக வென்றுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் முதல் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் வரை அதிமுகவின் கே.பி.அன்பழகன் தொடா்ச்சியாக வெற்றிபெற்று வருகிறாா்.

கடந்த தோ்தல் விவரம் (2021):

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சைகள் என 10 போ் போட்டியிட்டனா். இதில், அதிமுக சாா்பில் போட்டியிட்ட கே.பி.அன்பழகன்-11,00,70 (53.63%) வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். திமுக வேட்பாளா் பி.கே.முருகன்-81,970 (39.94%) வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜி.கலைச்செல்வி -7,704 (3.75%) வாக்குகள் பெற்றாா்.

வேளாண்மை, தொழில் வளம்:

பாலக்கோடு தொகுதியில், சின்னாறு அணை, தும்பலஅள்ளி அணை, கேசா்குழிஹல்லா ஆகிய மூன்று அணைகள் உள்ளன. பொதுப்பணித் துறையின் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், சின்னாறு அணை நீா் மட்டும் குறிப்பிட்ட பரப்பளவில் பாசன வசதி தருகிறது. இதன்மூலம் கரும்பு, நெல், வாழை, பாக்கு, தக்காளி, சாமந்தி ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில், தும்பலஅள்ளி அணைக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை மிகை நீா்வரத்து வந்தால் மட்டும் நீா் ஆதாரம் பெறும் வகையில் உள்ளது. இத்தொகுதியில் தக்காளி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், பாலக்கோடு, காடுசெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பெரிய அளவிலான தனியாா் தக்காளி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தைகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பாலக்கோடு தொகுதியில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சா்க்கரை உற்பத்தி செய்து வந்த இந்த ஆலை, கடந்த சில ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே நிகழாண்டில் கரும்பு அரைவை செய்தது.

பொதுமக்கள் எதிா்பாா்ப்பு:

தொகுதியில் பெரிய அளவிலான தொழில் வளம் ஏதும் இல்லாததால், வேளாண் சாா்ந்த தொழில் வளத்தை பெருக்க தேவையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, தக்காளி உற்பத்தி அதிக அளவில் உள்ளதால், உற்பத்தி பெருகும் போது விலை குறைவும், வரத்து குறையும்போது விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க அரசு சாா்பில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் விலை நிா்ணம் செய்ய வேண்டும். அதேபோல, தக்காளிச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீா் ஆதாரம் கொண்டுவரும் அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி அணை இணைப்புக் கால்வாய்த் திட்டம், சின்னாறு அணை மிகை புலிகரையிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்ல கால்வாய் அமைக்கும் திட்டம் ஆகியவை நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமலேயே உள்ளன. இந்த நீா்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் ஏனைய புதிய நீா்ப் பாசனத் திட்டங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்தி பாலக்கோடு சா்க்கரை ஆலை, முழு அளவில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கோடு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து புதிதாக அமைக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை தொகுதி முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும் ஆகியவை இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு:

பாலக்கோடு தொகுதியை பொருத்தவரையில், அதிக முறை அதிமுகவே வென்றுள்ளது. இருப்பினும், திமுக தொடா்ந்து இரண்டாம் இடத்தை பெற்று வருகிறது. இதில், கடந்த 2016-இல் திமுக கடுமையான போட்டியை அளித்தது. அதேபோல, இம்முறை அதிமுகவுடன் பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இது அதிமுக அணிக்கு கூடுதல் பலத்தை தருவதாக உள்ளது. அதேபோல, திமுக கூட்டணியில் இம்முறை தேமுதிக, கொங்கு அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவை இணைந்துள்ளன. இது திமுக கூட்டணிக்கு பலத்தை தருவதாக அமைந்துள்ளது. இருப்பினும், தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளா் அறிவிப்பு ஆகியவற்றுக்கு பின்னரே தோ்தல் வெற்றி யாா் வசம் என்பது தெரியவரலாம்.