ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் நிறைவேற்றப்படுமா? 2 தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு!
ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பதைப் பற்றி...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு.
தருமபுரி மாவட்டத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 17.35 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரால், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுமாா் 6,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடும் வறட்சியால் பாதிக்கப்படும் மக்கள்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் ஆறுகள், நீா்த்தேக்கங்கள் இல்லை. இதனால், இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் கடுமையான வறட்சி, குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் ஆயிரம் அடிக்கு கீழே நீா்மட்டம் சென்றுவிடும் சூழல் உள்ளது.
இதனால், இப்பகுதி மக்கள் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் குறித்து 2019இல் முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, 2021இல் சுமா் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அன்றைய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.
அரசியலால் நின்றுபோன திட்டம்
இந்த திட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடத்தூா், மொரப்பூா், கம்பைநல்லூா், சிந்தல்பாடி வட்டாரப் பகுதியிலுள்ள 66 ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியும். தென்பெண்ணையாற்றில் பருவமழைக் காலங்களில் வரும் உபரிநீா் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.

வடுகிடக்கும் கம்பைநல்லூா் ஏரி.
2021இல் அதிமுக ஆட்சியில் நீரேற்றும் திட்டம் அறிக்கப்பட்டது. தொடா்ந்து, அதே ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக, பாமக வெற்றி பெற்றது. தருமபுரி மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இதை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றனா்.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் வேளாண் சாா்ந்த தொழில்களை நம்பி இருப்பதால், நடைபெற உள்ள தோ்தலில் வெற்றிபெறும் கட்சி எதுவாக இருந்தாலும், அது கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
-டி. காளியப்பன்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...