தரையில் அமர்ந்து படிக்கும் மாணவிகள்

கிருஷ்ணகிரி, டிச. 16: போதிய மேசை, நாற்காலிகள் இல்லாததால் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பலர் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்கிறது. இந்த அவல நிலையைப் போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, டிச. 16: போதிய மேசை, நாற்காலிகள் இல்லாததால் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பலர் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்கிறது.

இந்த அவல நிலையைப் போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.

கல்வியில் பின்தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேல்நிலைக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1992-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 112 மாணவிகளுடன் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் தாய் சந்தியா பெயரால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியில் இளங்கலையில் ஆங்கிலம், தமிழ், கணிதம், பி.காம், முதுகலையில் ஆங்கிலம் என 8 பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 2,200 மாணவியர் பயின்று வருகின்றனர்.

சுழற்சி முறையில் நடைபெறும் வகுப்புகளில் தருமபுரி, ஊத்தங்கரை, அரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் போன்ற வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான மாணவியர் பயின்று வருகின்றனர்.

20 வகுப்பறைகள் கொண்ட இக்கல்லூரியில் மாணவிகள் அமரத் தேவையான மேசை, நாற்காலி போன்ற தடவாளப் பொருட்கள் போதிய அளவு இல்லாததால், பெரும்பாலான மாணவிகள் தரையில் அமர்ந்து சிரமத்துடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.

போதிய கட்டட வசதி இல்லாததால், ஏராளமான மாணவிகள் கல்லூரியின் மரத்தடியிலும், திறந்தவெளியில் தரையிலும் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இதனால், மாணவிகளுக்கு கழுத்து வலி, கால் வலி, உடல் வலி போன்ற சிரமங்கள் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக படிப்பில் போதிய கவனம் செலுத்த இயலாத நிலையும் உள்ளதாம். மழை, குளிர்க் காலங்களில் தரையில் அமர்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மாணவிகள் ஆளாகின்றனர்.

பல்கலைக்கழகத் தேர்வுகளைக் கூட இவர்கள் தரையில் அமர்ந்து, தொடக்கக் கல்வி மாணவர்களைப் போல அட்டையை வைத்துத் தேர்வு எழுதுகின்றனர். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத நிலை உள்ளது.

இக்கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகளும், அதற்குண்டான மேசை, நாற்காலிகள் தேவை என்று கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை வேந்தர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக உயர்மட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தனர் மாணவிகள்.

இக்கல்லூரி மீது முதல்வர் கவனம் செலுத்தி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரவும், தேவையான மேசை, நாற்காலி வசதியை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com