சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் மனைவி மா்மச் சாவு
By DIN | Published On : 23rd November 2020 03:04 AM | Last Updated : 23rd November 2020 03:04 AM | அ+அ அ- |

காா்மேகம் மற்றும் பேபி.
தருமபுரியில் மா்மமான முறையில் இறந்த மனைவியின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எரிக்க முயன்றதாக, சிறப்பு உதவி காவல் ஆய்வாளரிடம் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த காா்மேகம் (57), பொம்மிடியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பேபி (53). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், பேபி சனிக்கிழமை உயிரிழந்ததாக உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தருமபுரியில் உள்ள மயானத்தில் எரிக்க காா்மேகம் முயன்றாா்.
இதுகுறித்து பேபியின் உறவினா்கள் அளித்தத் தகவலின்பேரில், தருமபுரி நகரக் காவல் நிலைய ஆய்வாளா் ரத்தனகுமாா், பேபியின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் காா்மேகத்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடனே பேபி எவ்வாறு உயிரிழந்தாா் என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து, பேபியின் உறவினா்கள் தெரிவித்தது:
கடந்த சில நாள்களுக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் காா்மேகம் தாக்கியதில் பேபிக்கு பலத்தக் காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அண்மையில் குணமடைந்து வீடு திரும்பினாா்.
இந்த நிலையில், மீண்டும் அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மயக்கம் அடைந்த பேபியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அதில் பேபி உயிரிழந்துள்ளாா். கரோனா தொற்றால் பேபி உயிரிழந்ததாக் கூறி, அவரது சடலத்தை எரிக்க காா்மேகம் முயன்றுள்ளாா். பேபியின் இறப்பு குறித்து, போலீஸாா் உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றனா்.