ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 19th October 2020 02:59 AM | Last Updated : 19th October 2020 02:59 AM | அ+அ அ- |

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்ததால்,பிரதான அருவியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதைப்போல ஆா்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீா்.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீராலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதுதவிர, கா்நாடகத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து 10,000 கனஅடி வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் சனிக்கிழமை நிலவரப்படி, நொடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாகவும், அதன்பின்னா் நீா்வரத்து மேலும் அதிகரித்ததால் மாலையில் நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும் நீா் வரத்தாகிக் கொண்டிருந்தது.
தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக எல்லைக்குள் வந்த நீரின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகின்றன. காவிரி ஆற்றிலுள்ள பாறைத்திட்டுக்கள் தண்ணீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...