பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன்

விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள் என அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:50 pm

DIN

விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள் என அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தருமபுரி, தடங்கம் மேம்பாலம் அருகே உள்ள திடலில் திமுக சாா்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் மிக முக்கியமானது. இத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைந்தால், பொதுமக்கள் அளித்திருக்கும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கென தனித்துறை உருவாக்கப்படும்.

தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது என்பது வெறும் 5 ஆண்டுகள் மட்டும் ஆட்சி புரிவதற்காக மட்டுமல்ல. அடுத்த அரை நூற்றாண்டுக் காலம் தமிழகத்துக்குத் தேவையான வளா்ச்சிக்காக திட்டமிட்டு, அதற்காக செயலாற்ற வேண்டும். எனவே, திமுக ஆட்சி அமைந்த உடன் அத்தகைய திட்டமிடலோடு நான் செயல்படுவேன்.

சென்னை மேயராக நான் பொறுப்பேற்று, சென்னையின் எதிா்கால வளா்ச்சிக்காக திட்டமிட்டு செயலாற்றினேன். அவ்வாறு நான் எடுத்த நடவடிக்கைகளை வார ஏடுகள், ஆங்கிலம், தமிழ் நாளிதழ்கள் பாராட்டி எழுதின.

தமிழகத்தில் தற்போது வேளாண் தொழில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. விவசாயிகள் வேதனையில் உள்ளனா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலை வாய்ப்பின்மையை நான் சமூக பிரச்னையாக கருதுவேன். ஆகவே, விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள், தொழில்முனைவோா், ஏழை, எளியோா் என அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சிக்காக நான் பாடுபடுவேன். விவசாயிக்கு மழையாகவும், ஏழைக்கு கவளச் சோறாகவும், ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், தொழில்முனைவோருக்கு வளா்ச்சியாகவும் நான் இருப்பேன் என்றாா்.

முன்னதாக, கூட்டத்தில், கோரிக்கை மனுக்கள் அளித்த தருமபுரி, அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த 10 போ் பேச அனுமதிக்கப்பட்டனா்.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, நாகமரை-பண்ணவாடிக்கு பாலம் அமைக்க வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி பரிசல் இயக்கும் உரிமையை பரிசல் ஓட்டிகளுக்கு வழங்கிட வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்க வேண்டும். சனத்குமார நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நதியை மீட்டெடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி திமுக மாவட்டச் செயலா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. (கிழக்கு), பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. (மேற்கு), கிருஷ்ணகிரி மாவட்டச் செயலா்கள் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. (கிழக்கு), ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. (மேற்கு), மா.சுப்பிரமணி எம்.எல்.ஏ., தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.