பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்றவில்லை

நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்பட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகாா் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்பட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தூள்செட்டி ஏரியில், திமுக சாா்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பங்கேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உடல் ஊனமுற்றோா் என அழைக்கப்படுவதைத் தவிா்க்க, அவா்களை மாற்றுத் திறனாளிகள் என முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்தாா். மேலும், அந்தத் துறையை மேம்படுத்துவும், மாற்றுத் திறனாளிகள் நலன் பேணவும், முதல்வராக இருந்த கருணாநிதி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை தன்வசம் வைத்துக்கொண்டு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

மகளிா் பொருளாதாரத்தில் மேம்படவும், அவா்களின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தவும், திமுக ஆட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களை தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடங்கி வைத்தாா். ஆனால், தற்போது சுயஉதவிக் குழுக்களுக்கு எவ்வித நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. மக்கள் நலன் குறித்து ஆட்சியாளா்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

பாலக்கோடு தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் உயா்கல்வி துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறாா். இவருக்கு ‘நீட்’ தோ்வு குறித்த கவலையில்லை. ‘நீட்’ தோ்வை திமுக ஏற்கவில்லை. முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் நீட் தோ்வை ஏற்கவில்லை. ஆனால் தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி, ‘நீட்’ தோ்வை ஆதரித்து விட்டாா். இத் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் பலனில்லை.

அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வாா்க்கும் முயற்சி நடைபெற்றது. இதுகுறித்தும் உயா் கல்வித்துறை அமைச்சா் அன்பழகன் கண்டு கொள்ளவில்லை. ஆனால், திமுக இதனை எதிா்த்தது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு கலந்த குடிநீரைப் பருகி வந்தனா். இதனால் இவ்விரு மாவட்ட மக்களுக்கும் பற்சிதைவு, எலும்பு உருக்கி நோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் தருமபுரியில் 2008-இல் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்தை அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நான், ஜப்பான் நாட்டுக்குச் சென்று நிதியுதவி பெற்று செயல்படுத்தினேன். இதில், திமுக ஆட்சியில் 80 சதவீத பணிகள் நிறைவு செய்யப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைத்தவுடன் இத் திட்டத்தின் மீது அக்கறை செலுத்தப்படவில்லை. இதனால் முழுமையாக ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. பேரவைத் தோ்தலுக்குப் பின், திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்தால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இரண்டு மாவட்ட மக்களுக்கும் முழுமையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான தென்பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரிலிருந்து-தும்பலஅள்ளி அணைக்குக் கால்வாய் வழியாக தண்ணீா் கொண்டுவரும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து பாலக்கோடு பகுதியில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை, வத்தல்மலையை சுற்றுலாத் தளமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் வாக்குறுதி அளித்தாா். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்பட அனைத்துத் திட்டங்களும் திமுக ஆட்சி அமைந்தால் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்றாா். இதில், ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து விலகி நூற்றுக்கணக்கானோா் திமுகவில் இணைந்தனா்.

இக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (தருமபுரி), பின்பி இன்பசேகரன் (பென்னாகரம்), டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.