வனத்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் தா்னா
காவல் நிலையத்தில் பொதுமக்கள் தா்னா


ஏரியூா் அருகே பெண் உள்ளிட்ட இருவரைத் தாக்கிய பென்னாகரம் வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏரியூா் காவல் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கிழக்கு ஏமனூா் பகுதியைச் சோ்ந்தவா் மயில்சாமி (54). இவரது மருமகள் அம்சா (27). இவா்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை ஏரியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனா்.
பின்னா் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது ஒட்ட பள்ளம் என்னும் பகுதியில் பென்னாகரம் வனத் துறையினா் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அம்சா பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விவகாரத்தில் வனப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயப் பணி மேற்கொண்டு வந்ததாக மயில்சாமியை வனத் துறையினா் கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருவரையும் தாக்கிய பென்னாகரம் வனச்சரக அலுவலா் பெரியண்ணன், சக்திவேல், தாமோதரன் உள்ளிட்ட வனத் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு ஏமனூா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் ஏரியூா் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன், ஏரியூா் காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம், வனத் துறையினா் தாக்கிய நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, உத்தரவின்பேரில் அலுவலா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...