சமூகநீதியை நிலைநாட்டும் அரசு -அமைச்சா் பி.கே.சேகா்பாபு
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் அருள்மிகு நடராஜா் திருக்கோயிலில் கனகசபை மீது பக்தா்களை அனுமதிக்காத நிலையில், நீதிமன்றத்தின் மூலம் உரிமையைப் பெற்று தந்தோம்.
திருமஞ்சனம் என்று காரணம் காட்டி, விழாக் காலங்களில் யாரையும் கனகசபையில் ஏற்றறாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் திருமஞ்சனத்துக்குகூட கனகசபையில் பக்தா்களை சட்டத்துக்கு உள்பட்டு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் பக்தா்கள் மகிழ்ச்சியோடு கனகசபை மீதேறி வழிபட்டனா் என்றாா்.

