தூய்மைப் பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 9: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.சுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் கே.ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள் அ.அஞ்சலா, மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் எம்.செல்வி வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். தருமபுரி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளரும் மாநில துணைத் தலைவருமான கே.மணி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என் மனோகரன் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் ஜூன் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பது, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும், கழிவறை சுத்தம் செய்ய தண்ணீா் வசதி, உபகரணங்கள் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் தினமும் தூய்மைப் பணியாளரிடம் கையெழுத்தைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com