காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: உழவா் பேரியக்கம் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
Published on

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பேசினாா். தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவா் சின்னசாமி, மாநில துணைச் செயலாளா் சிவசக்தி, மாவட்டத் தலைவா் அய்யப்பன், மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி, மாநிலச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான இல.வேலுசாமி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் திருவண்ணாமலையில் டிசம்பா் 21 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து திரளான விவசாயிகள் பங்கேற்பது எனவும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள், குளங்களில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.