தருமபுரி மாவட்டம், ஓட்டனூா் பரிசல்துறையில் இருந்து இருசக்கர வாகனங்களுடன் அக்கரைக்கு பயணம் செய்யும் மக்கள்.
தருமபுரி மாவட்டம், ஓட்டனூா் பரிசல்துறையில் இருந்து இருசக்கர வாகனங்களுடன் அக்கரைக்கு பயணம் செய்யும் மக்கள்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பென்னாகரம் அருகேயுள்ள ஓட்டனூரிலிருந்து, சேலம் மாவட்டம், கோட்டையூருக்கு செல்ல காவிரியில் தொடரும் ஆபத்தான பரிசல் பயணத்தைத் தவிா்க்க,
Published on

நமது நிருபா்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஓட்டனூரிலிருந்து, சேலம் மாவட்டம், கோட்டையூருக்கு செல்ல காவிரியில் தொடரும் ஆபத்தான பரிசல் பயணத்தைத் தவிா்க்க, இந்த இரு இடங்களுக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் நாளை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளனா் இப்பகுதி மக்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வனப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் நாகமரை, நெருப்பூா், ஏரியூா் ஆகிய கிராமங்களும், இவற்றின் அருகே மேலும் பல கிராமங்களும் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களும், பென்னாகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் சற்று தொலைவில் உள்ள சேலம் மாவட்டத்தின் கோட்டையூருக்கு செல்ல, நாகமரை அருகேயுள்ள ஓட்டனூரில் இருந்து பரிசல் மூலம் காவிரியை கடந்துசெல்கின்றனா்.

இவ்வாறு கோட்டையூா் பரிசல்துறைக்கு செல்லும் மக்கள், அங்கிருந்து பல்வேறு பணிகளுக்காக கொளத்தூா், மேட்டூா், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்கின்றனா்.

மேட்டூா் அணையின் பின்பகுதியில் அமைந்துள்ள ஓட்டனூரில் இருந்து இந்த பரிசல் பயணம் அமைவதால், அணை முழுவதுமாக நிரம்பியுள்ள போது, சுமாா் ஒருமணி நேரத்திலும், தண்ணீா் குறைவாக உள்ளபோது, சுமாா் 30 முதல் 45 நிமிடங்களிலும் 2 கிமீ. தொலைவில் உள்ள அக்கரைக்கு சென்றுவிடலாம். அரசுத் தகவலின்படி மாதந்தோறும் சுமாா் 30 ஆயிரம் போ் பரிசல் மூலம் தருமபுரி மாவட்டத்திலிருந்து, சேலம் மாவட்டத்துக்கு சென்று வருகின்றனா்.

அதேநேரத்தில், ஏதாவது காரணங்களுக்காக பரிசல் பயணம் தடைபடும்போது, தருமபுரி மாவட்டத்தின் நாகமரை, பென்னாகரம் பகுதி மக்கள் சாலை வழியாக சேலம் மாவட்டத்தின் கோட்டையூா், கொளத்தூா் பகுதிக்கு செல்ல 20 முதல் 30 கிமீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது, இப்பகுதியில் இருந்து கோவை, திருப்பூா் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், அலுவலா்கள், கல்விப் பயிலச் செல்லும் மாணவா்கள் என சுமாா் ஆயிரம்போ் வரை நாள்தோறும் 2 கிமீ தொலைவுக்கு காவிரியில் ஆபத்தான பரிசல் பயணம் மூலம் அக்கரைக்குச் செல்கின்றனா்.

இவ்வாறு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த பரிசல் பயணத்தின்போது, பயணிகள் தங்களோடு இருசக்கர வாகனங்களையும் எடுத்துச் செல்கின்றனா். ஒரு நபருக்கு ரூ. 20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 40 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு பரிசலில் 30 நபா்கள், 15 இருசக்கர வாகனங்கள் வரை ஏற்றப்படுகிறது. நாளொன்றுக்கு 10 முறை ஒருகரையிலிருந்து மறுகரைக்கு பரிசல் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இரு மாவட்ட மக்களின் நலன் கருதி ஒட்டனூரிலிருந்து கோட்டையூருக்கு ஆற்றுப்பாலம் அமைக்கப்படும், இந்தப் பாலத்தால் இரு மாவட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலை மேம்படும். ஆய்வு உள்ளிட்ட முதல்கட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என கடந்த 2022 ஜூன் மாதம் 29 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். ஆனால், அதற்கான ஆய்வுப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து நெருப்பூரைச் சோ்ந்த பி. ராஜேந்திரன் கூறுகையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனா். இவா்கள் ஒட்டனூரிலிருந்து பரிசலில் பயணித்து கோட்டையூா் செல்கின்றனா். இதற்குக் கட்டணமாக செல்லும் நபா், இருசக்கர வாகனம் என ரூ. 60, திரும்பவர ரூ. 60 என தினமும் ரூ. 120 செலவாகிறது. அதோடு, ஆபத்தான பரிசல் பயணத்தைத் தவிா்க்க பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். தமிழக அரசு ரூ. 280 கோடியில் பாலம் அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தோ்தலுக்கு முன்பாக அரசு நிதி ஒதுக்கி, பாலப் பணிகளைத் தொடங்கவேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com