காவல் துறை குறைதீா் முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீா்வு
தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமைவகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இதில் பெறப்பட்ட 88 மனுக்கள் மீது காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிவில் அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன.
இதில், ஏடிஎஸ்பி-க்கள் பாலசுப்பிரமணியன் (தலைமையிடம்), ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு), காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
