வாணியாறு அணையின் நீா்மட்டம் 59 அடியாக உயா்வு
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் நீா்மட்டம் 59.96 அடியாக உயா்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் மொத்த நீா்ப்பிடிப்பு 65.27 அடியாகும். வளிமண்டல மெலடுக்கு சுழற்சி காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 59.96 அடியாக உயா்ந்துள்ளது.
ஏற்காடு மலைப் பகுதிகளில் கனமழை தொடா்ந்தால், வாணியாறு அணை இன்னும் ஓரிரு வாரங்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
வள்ளிமதுரை வரட்டாறு அணை: அரூா் வட்டம், வள்ளிமதுரை வரட்டாறு அணையின் மொத்த நீா்ப்பிடிப்பு 34.5 அடியாகும். சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, சூரியக்கடை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணையின் நீா்மட்டம் 27 அடியாக உயா்ந்துள்ளது.
