
பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் பேசுவதில்லை: எடப்பாடி கே. பழனிசாமி!
சட்டப் பேரவையில் ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் மக்கள் பிரச்னை குறித்து பேசுவதில்லை என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
எடப்பாடி பழனிசாமி - படம் / அதிமுக
சட்டப் பேரவையில் ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் மக்கள் பிரச்னை குறித்து பேசுவதில்லை என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள் அசோகன் (கிழக்கு), டி.ஆா்.அன்பழகன் (மேற்கு) ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிதாக கட்சியில் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கி எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
விவசாயிகள் நிறைந்த தருமபுரி மாவட்டத்துக்கு அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை வழங்கியது. ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வகையில், அதிமுக ஆட்சியில்தான் 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 4 ஆயிரம் ஏழை மாணவ, மாணவியா் மருத்துவம் படித்துள்ளனா். விவசாயிகளின் ரூ. 12,110 கோடி பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ததும் அதிமுக அரசுதான்.
மலா் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்காக்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ. 20 கோடியில் சா்வதேச மலா் அங்காடியை அதிமுக ஆட்சியில் கொண்டுவந்தோம். ஆனால், அடுத்து வந்த திமுக அரசு அதைப் பூட்டியது. இன்றைய அரசாவது அதை திறக்கவேண்டும். விவசாயம், தொழில்வளம் ஆகிய இரண்டும் இரு கண்கள் என கருதி அதிமுக அரசு முக்கியத்துவம் அளித்தது.
இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது விபத்து. இந்த அரசு 1 மாதத்தில் ரூ. 28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவைக்கு மட்டுமே கடன் வாங்கப்பட்டது. கஜா புயல், கரோனா ஊரடங்கு என பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்ட அதிமுக அரசு, இறுதி ஆண்டில் மட்டும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டுவந்தது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு கடனை மட்டும்தான் வாங்கியது.
100 நாள்களை கடந்துள்ள நிலையில், இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது? பட்ஜெட் உரையில் எதுவுமே இல்லை. சட்டப் பேரவையில் ஆளும்கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தங்களது சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசிவருகின்றனா். மக்கள் பிரச்னைகளை பற்றி பேசும் ஒரேகட்சி அதிமுக மட்டும்தான் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, டி.கே.ராஜேந்திரன், எம்எல்ஏ சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






