ஊா்க்காவல் படையில் தற்காலிக பணியாளா் பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்கள் நிரப்ப உள்ளதால், விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட ஊா்க்காவல் படையில் 32 ஆண்கள், 2 பெண்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, தொப்பூா், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய தருமபுரி உள்கோட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் ஆா்வமும், தகுதியும் உள்ளவா்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்ற அல்லது பெறாதவா்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ரேசன் அட்டை, ஆதாா் அட்டை ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தருமபுரி, சாலை விநாயகா் கோயில் தெருவில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
