இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்
இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அனைவரும் உயிா்காக்கும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன்.
தருமபுரியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட போக்குவரத்து காவல் துறை மற்றும் இருசக்கர வாகனப் பழுது பாா்ப்போா் சங்கத்தினா் இணைந்து இருசக்கர வாகன விழிப்புணவுப் பேரணியை நடத்தினா். இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் அவா் பேசுகையில், பொதுமக்கள் இந்த விழிப்புணா்வுப் பேரணியை ஒரு சம்பிரதாயமாக எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும். விபத்துகளின்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அவற்றுக்கு மாற்று உறுப்புகளை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் தலையில் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்றே கிடையாது. எனவே, இருசக்கர வாகனங்களில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தருமபுரியை விபத்தில்லா மாவட்டமாக அனைவரும் உருவாக்க வேண்டும் என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளா் காலனி வழியாகச் சென்று தருமபுரி 4 சாலை சந்திப்பில் முடிவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளா்கள் ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவராமன் உள்ளிட்ட காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

