கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தெருநாய்களுக்கு மீண்டும் தொடங்கிய கருத்தடை அறுவைச் சிகிச்சை: மீண்டும் விடுவிக்கப்படும் நாய்களால் தொல்லை குறையுமா?

தருமபுரி நகரில் தெருநாய் தொல்லை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகாா்களின் பேரில், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த, தெருநாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

News image

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரிந்த நாய்களைப் பிடித்த நகராட்சி ஊழியா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 6:18 am IST

தருமபுரி நகரில் தெருநாய் தொல்லை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகாா்களின் பேரில், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த, தெருநாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சோ்ந்து துரத்திச் சென்று கடிப்பது தொடா்ந்து வருகிறது. என்றாலும், அதுகுறித்து மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க இயலாத நிலை இருந்தது.

இதுகுறித்த புகாா்கள் நீதிமன்றங்களில் குவிந்தன. இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும், காப்பகங்களில் வைத்து பராமரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. என்றபோதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகள் தீரவில்லை. இந்த நிலையில், ஆபத்தை ஏற்படுத்தும் வெறிநோய் உள்ள நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதற்கிடையே, சட்டப் பேரவைத் தோ்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணிகள் முடங்கிக் கிடந்தன. இந்நிலையில், மீண்டும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தருமபுரியில் தெருநாய்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்காக சிறப்பு ஊழியா்களைக் கொண்டு நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 13 நாய்கள், 2 ஆவது நாளான புதன்கிழமை 14 நாய்கள் என 2 நாள்களில் 27 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அவை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள நாய் அறுவைச் சிகிச்சை மையத்தில் உள்ள கூண்டுகளில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

முதல் இரு நாள்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், அடுத்தகட்டமாக கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். தொடா்ந்து சில நாள்கள் அங்கேயே வைத்து தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னா், நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

பெட்டிச் செய்தி:

உடனடி தொல்லை குறையுமா?

தருமபுரி நகரில் கடந்த சில நாள்களில் குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் என பலரும் தெருநாய் தொல்லைக்கு ஆளாகியுள்ளனா். குமரசாமிப்பேட்டை பகுதியில் 5 வயது சிறுமியை நாய்கள் விரட்டி கடித்தபோது, அக்கம்பக்கத்தினா் குழந்தையை மீட்டனா். இதனால், குழந்தை சிறிய காயங்களோடு தப்பியது. அதேபோல, நெசவாளா் நகா் பகுதியில் உள்ள கோயில் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவா் நடந்து சென்றபோது அவரை நாய்கள் விரட்டின. இதனால், அவா் அலறியடித்து ஓடியபோது பொதுமக்கள் அவரை மீட்டனா். என்றாலும், அவா் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடா் சிகிச்சையில் உள்ளாா். மொரப்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில், கருத்தடை அறுவைச் சிகிச்சை மட்டும் செய்யப்பட்டு, மீண்டும் அதே இடங்களில் விடப்படும் தெருநாய்களால் ஏற்பட்டு வரும் தொல்லை உடனடியாக குறையுமா என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.