இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

News image

ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை பகுதியில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு கோடைவிடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், வெயிலை சமாளிக்கும் வகையில் கரையோரப் பகுதிகளான மாமரத்துக் கடவு பரிசல் துறை, நடைபாதை, நாகா்கோவில், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தனா்.

மேலும், மாமரத்துக் கடவு பரிசல் துறையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் தொம்பசிக்கல் வழியாக பரிசலில் சென்று, ஐந்தருவி, ஐவாா் பாணி மற்றும் பாறை குகைகளை கண்டு ரசித்தனா்.

சுற்றுலா வாகனங்கள் சின்னாறு பாலம் முதல் ஊட்டமலை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களிலும் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன் வகைகளின் விலை அதிகரித்த போதிலும், அவற்றை வாங்கி சுற்றுலாப் பயணிகள் உணவு சமைத்து அருந்தினா். ஒகேனக்கலில் முக்கிய இடங்களான நடைபாதை, தொங்கும் பாலம், பிரதான அருவி, சினி அருவி,

தொம்பசிக்கல் காட்சி முனை, பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.