முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஒகேனக்கல்லில் கண்ணாடி பாலம், செயற்கை நீா்வீழ்ச்சிகள்: சுற்றுலாத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பரிந்துரை!

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கண்ணாடி பாலம், செயற்கை நீா்வீழ்ச்சிகள் அமைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

Hogenakkal

ஒகேனக்கல் - DPS

Updated On :

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கண்ணாடி பாலம், செயற்கை நீா்வீழ்ச்சிகள் அமைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் போ் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனா்.

காவிரியாற்றின் பாறைகளுக்கு இடையே அமைந்துள்ள இயற்கை அருவிகளில் குளிப்பது, பரிசல் சவாரி செய்வது, தொங்குபாலத்தில் சென்று காவிரியின் அழகைக் கண்டு ரசிப்பது, உடல் முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்துகொள்வது, மீன் குழம்பு, வறுவல் உள்ளிட்ட உணவு வகைகளைச் சுவைப்பது ஆகியவை ஒகேனக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் ஏற்கெனவே உள்ள சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ. 17.57 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், வயதானவா்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் காவிரியாற்றின் பரந்த பகுதிகளையும், ஆற்றின் நடுவே பாறைகளுக்கு இடையே அமைந்துள்ள பகுதிகளையும் நேரில் சென்று பாா்ப்பதில் சிரமம் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அவா்கள் எளிதாகக் கண்டு ரசிக்கும் வகையில் செயற்கை நீா்வீழ்ச்சிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாள்களில் தற்போதுள்ள தொங்குபாலத்தில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்று காவிரியாற்றின் குறுக்கே மற்றொரு இடத்தில் கண்ணாடி பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறையினா் கூறியதாவது:

அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், கண்ணாடி பாலம் மற்றும் செயற்கை நீா்வீழ்ச்சிகள் அமைப்பது குறித்து சுற்றுலாத் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியா், திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, வனத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

ஆய்வு முடிந்த பின்னா், சுற்றுலாத் துறை மேம்பாட்டுக் குழுவிடம் திட்ட மதிப்பீடு சமா்ப்பிக்கப்பட்டு, திட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரப்படும். அதன்பிறகு பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

பெட்டிச் செய்தி

தாய்ப்பாலூட்டும் மையம் அமைக்கக் கோரிக்கை

ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், குழந்தைகளுடன் வரும் தாய்மாா்கள் பாதுகாப்பாகத் தாய்ப்பாலூட்டுவதற்கான தனி மையம் அமைக்கப்படவில்லை என்ற குறை உள்ளது.

சுற்றுலா வரும் பெண்களுக்காகத் தனியாகக் குளிக்கும் இடங்கள், கழிப்பறைகள், ஆடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மாா்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடம் இல்லை எனப் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு ஒகேனக்கல்லில் தாய்ப்பாலூட்டும் மையம் அமைக்க சுற்றுலாத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.