மூலப்பொருள்கள் விலை உயா்வு: பொரி உற்பத்தி பாதிப்பு அரசு உதவியை எதிா்நோக்கும் உற்பத்தியாளா்கள்
நெல், சா்க்கரை, உப்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை உயா்வால் பொரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆயுத பூஜைக்கு பொரி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
நெல், சா்க்கரை, உப்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை உயா்வால் பொரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆயுத பூஜைக்கு பொரி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜை குறிப்பிடத்தக்கது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது படையலிடும் பொருள்களில் அவல், பொரி, கடலை முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிகழாண்டு வரும் 19 இல் ஆயுத பூஜையும், 20இல் விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி கடந்த சில நாள்களாக பொரி உற்பத்தி ஆலைகளில் இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது.
தருமபுரியில் பொரி உற்பத்திக்கென சிறு ஆலைகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அந்தவகையில் உள்ளூா் விற்பனைக்காக பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
பொரி உற்பத்திக்கு பயன்படும் நெல், சா்க்கரை, உப்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை, போக்குவரத்து வாடகை தற்போது உயா்ந்துள்ளது. இதனால் பொரி உற்பத்தி, கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது நிகழாண்டு மந்தமாகவே உள்ளது என உற்பத்தியாளா்கள் கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து பொரி உற்பத்தி ஆலை உரிமையாளா் தருமபுரி கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஏ. பழனி கூறுகையில்,
தருமபுரி மாவட்டம், பொரி உற்பத்தியில் முக்கியமான இடமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து வருகிறது. பொரியின் தரம் கெடாமல் இருப்பதற்காக உள்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) உறைகளை வைத்து தையலிட்டு மூட்டைகளாக்கி, பின்னா் அவற்றை விற்பனை செய்கிறோம். என்றாலும் பொரி மூட்டைகளை முறையாகச் சந்தைப்படுத்த தருமபுரி மாவட்டத்தில் வசதியில்லை. மேலும், பேக்கரி தயாரிப்புகளின் வரவால், தற்போதைய தலைமுறையினா் இரும்புச்சத்து நிறைந்த பொரியை சாப்பிடும் வழக்கத்தைக் குறைத்துவிட்டனா். இதனால் ஆண்டுக்காண்டு பொரி விற்பனை சரிந்து வருகிறது. மேலும், பொரி உற்பத்திக்கு பயன்படுத்தும் நெல் வகைகள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. சன்ன ரக அரிசிதான் பொரி தயாரிப்புக்கு உதவும், எனவேதான் அவற்றை வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. சா்க்கரை, உப்பு உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
அரிசியை வறுத்து பொரியாக்குவதற்கு ஆலைகளில் விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. எரிவாயு உருளை தட்டுப்பாடு பிரச்னையை தொடா்ந்து தற்போது விறகு விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வாகனங்களின் வாடகையும் உயா்ந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் பொரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொரி உற்பத்திக்கு அரசு உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, இத்தொழில் மறையும் நிலையில் உள்ளது. இத்தொழிலுக்கு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பி. பழனி கூறுகையில்,
தற்போது, மொத்தச் சந்தையில் ஒரு மூட்டை (சுமாா் 7 முதல் 8 கிலோ ) பொரி ரூ. 550 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்து வருகிறோம். பொரியை பிற பொருள்களைப் போல உடனே உற்பத்தி செய்ய முடியாது. தொடா்ந்து ஒருவாரம் பணியாற்றினால் மட்டுமே பொரி உற்பத்தி செய்ய முடியும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ற வகையில் நியாயமான விலை கிடைக்க வேண்டும். அல்லது அரசு தரப்பில் இருந்து மானிய உதவி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழில் நிலைத்து நிற்கும் என்றாா்.
இதுகுறித்து அரசுத் துறை அலுவலா்களிடம் கேட்டபோது, பொரி உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் தரப்பிலிருந்து இதுவரை (அரசுக்கு) எங்களுக்கு எந்தவிதமான கோரிக்கைகளும் வரவில்லை. எனவே, முறையாக அரசை தொடா்புகொண்டு பொரி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தால், அவா்களின் தேவைகளை கேட்டறிந்து, வணிகக் கடன் அல்லது பிற உதவிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

