கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் நான்காம் ஆண்டு நற்றமிழ் இலக்கியப் பெருவிழா வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ வித்யா மந்திர் கலையரங்கத்தில் அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் விழாவில், வித்யாமந்திர் பள்ளித் துணை முதல்வர் கு. சிவநேசன், ஆசிரியர் க.கந்தசாமி, வழக்குரைஞர் உறுதிமொழி, ஆணையர் இரா.த. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வித்யாமந்திர் பள்ளித் துணை முதல்வர் ஆ. சொக்கலிங்கம் வரவேற்கிறார்.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசுகிறார். தொடர்ந்து "கண்ணீர் விட்டே வளர்ந்தோம்' எனும் தலைப்பில் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி பேசுகிறார்.
தனியுரை: காலை 11 மணி முதல் 12. 30 வரை நடைபெறும் தனியுரை நிகழ்ச்சிக்கு மேனாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர். கிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். "வெளிச்சப் புள்ளிகள் வரையும் விடியல் கோலம்' எனும் தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
அமைச்சர்கள் பங்கேற்பு: பிற்பகல் 12. 30 மணி முதல் 2 மணி வரை சிறந்த அறிவியல் சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் முத்தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந் நிகழ்ச்சிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகிக்கிறார். ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலை வகிக்கிறார். தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் விருது வழங்கி வாழ்த்திப் பேசுகிறார். விண்வெளி ஆய்வு மையம் சந்திராயன் 1-2 திட்ட இயக்குநர் (ஓய்வு) மயில்சாமி அண்ணாதுரை விருதைப் பெற்று, ஏற்புரை வழங்குகிறார்.
பட்டிமன்றம்: பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணி வரை பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகிக்கிறார்.
"இன்றைய இளைய சமூகத்தின் பாதை' என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்துக்கு நடுவராக வாசுகி மனோகரன் பங்கேற்கிறார். "
மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் ஊடக அரங்கம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமை வகிக்கிறார்.
ஊடக வலைக்குள் உலகு என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சன் டி.வி. வீரபாண்டியன் தலைமை வகிக்கிறார்.
மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை தனியுரை நிகழ்ச்சிக்கு ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரிச் செயலர் ஆர்.பி. ராஜி தலைமை வகிக்கிறார்.
"ஈரமும் வீரமும்' என்ற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
நகைச்சுவை பாட்டு மன்றம்: இரவு 8 மணி முதல் 10 மணி வரை நகைச்சுவை பாட்டு மன்ற நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ச. மாதப்பன் தலைமை வகிக்கிறார். புது தில்லி தமிழ்ச் சங்கம் முனைவர் டேவிட்சன் வாழ்த்திப் பேசுகிறார்.
தமிழ்ச் சமுதாயம் வளம்பெறப் பாடிய திரையிசைக் கவிஞர்கள் என்ற தலைப்பில் பாட்டு மன்றம் நடைபெறும் .
நிகழ்ச்சியை க. ராசா, ப. ஸ்ரீதேவி தொகுத்து வழங்குகின்றனர். நா.பிரகாசம், ஜெ.வெங்கடேசன் ஒருங்கிணைக்கின்றனர். வே.சென்னகிருட்டிணன் நன்றி கூறுகிறார்.
ஏற்பாடுகளை முத்தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.