அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 487 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 129 பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 316 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 70 பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 171 பேரை போலீஸார் கைது
செய்தனர்.
ஒசூரில்
ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் புதன்கிழமை இக் கூட்டமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பொன். துரை தலைமையில் மறியல் ஈடுபட்ட 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேன்கன்கோட்டை வட்டத்தில் வட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோன்று சூளகிரி வட்டத்திலும், அஞ்செட்டி வட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. ஒசூரில் பெரும்பாலான பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தன.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 106 பெண்கள் உள்பட 211 பேரை ஊத்தங்கரை போலீஸார் கைது செய்தனர்.
பென்னாகரத்தில்....
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்துக்கு பென்னாகரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் கழகப் பொருளாளர் முனியப்பன் முன்னிலை வகித்தார். இதில் போராட்டத்தில் பங்கேற்ற 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் அடைக்கப்பட்டனர்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்றனர். இப் போராட்டத்துக்கு சண்முகம் தலைமை வகித்தார். மத்தூர் சுரேஷ் வரவேற்றார். போச்சம்பள்ளி சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், பாலசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் உள்ள திருபத்தூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









