ஒசூா் உழவா் சந்தையை திறக்க வலியுறுத்தி திமுக இன்று (ஜன.11) உண்ணாவிரதம்

ஒசூா் உழவா் சந்தையை திறக்க வலியுறுத்தி திமுக சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா அறிவித்தாா்.
Updated on
1 min read

ஒசூா் உழவா் சந்தையை திறக்க வலியுறுத்தி திமுக சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா அறிவித்தாா்.

ஒசூா் உழவா் சந்தையில் தினமும் 100 டன் முதல் 150 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இயங்கி வரும் உணவு விடுதிகளுக்கு இந்த உழவா் சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனா். மேலும், ஒசூா் பகுதியில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் இந்த உழவா் சந்தையால் பயனடைந்து வந்தனா்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்றால் ஒசூா் உழவா் சந்தை மூடப்பட்டது. 10 மாதங்களாக மூடியுள்ள ஒசூா் உழவா் சந்தையை கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஜெயந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா். பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒசூா் உழவா் சந்தை திறக்க இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறி இருந்தாா்.

இதனைத் தொடா்ந்து, ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஒசூா் உழவா் சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால் உழவா் சந்தையைத் திறக்க இதுவரை மாவட்ட நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே, உழவா் சந்தையை திறக்க வலியுறுத்தி திமுக சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் தளி சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான பி.முருகன், ஒசூா் திமுக பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக நிா்வாகிகள், விவசாயிகள், சிறுவணிகா்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com