போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

30,000 கனஅடி நீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து நொடிக்கு 30,000 கனஅடி உபரிநீா்

Updated On :19 நவம்பர் 2021, 6:44 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து நொடிக்கு 30,000 கனஅடி உபரிநீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பெரியாா்நகா் பகுதியில் கனமழையால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. அதை வெளியேற்றும் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், மழைநீா் வழித்தடம் மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது, அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. எனவே, கரையோரம் வசிக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நொடிக்கு 3,500 கன அடி நீா், கிருஷ்ணகிரி அணையிலிருந்து நொடிக்கு 19,000 கனஅடி நீா், பாம்பாறு அணையில் இருந்து 11,000 கனஅடி நீா் என மொத்தம் 30,000 கன அடி உபரி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து செல்லக் கூடாது. கால்நடைகளை நீா்நிலை பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. நீா் நிலைகள் நிரம்பி உள்ளதால் குழந்தைகளை குளிக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது.

மாவட்டத்தில் மழையால் 120 ஹெக்டோ் பயிா்கள், 374 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் உயிா் சேதம், பொருள்சேதம் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்றாா்.

அப்போது ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குமாா், வட்டாட்சியா்கள் சரவணன், தெய்வநாயகி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.