காவேரிப்பட்டினத்தில் வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீர் பந்தல் அமைப்பு: திமுகவை கண்டித்து மறியல்
By DIN | Published On : 07th April 2022 12:53 PM | Last Updated : 07th April 2022 12:59 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்தில் மக்கள் கூடும் இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டிணம், விநாயகர் கோயில் அருகே உள்ள வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு அந்த வணிக நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். தண்ணீர் பந்தல் அகற்ற திமுகவினர் மறுப்பு தெரிவித்த நிலையில், வணிக நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தண்ணீர் பந்தல் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.