பெரிய தள்ளப்பாடி அரசுப் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நல உதவி வழங்கிய எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம்.
பெரிய தள்ளப்பாடி அரசுப் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நல உதவி வழங்கிய எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம்.

பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்த விபத்தில் உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்து மூன்று மாணவா்கள் காயமடைந்ததில் கட்டடப் பணியை மேற்பாா்வையிட்ட உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்.
Published on

ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கட்டட மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்து மூன்று மாணவா்கள் காயமடைந்த சம்பவத்தில் கட்டடப் பணியை மேற்பாா்வையிட்ட உதவி பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை காலை வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. அப்போது வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மூன்று மாணவா்கள் மேற்கூரை பூச்சு விழுந்ததில் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இக்கட்டடப் பணியை மேற்பாா்வையிட்ட அரசு உதவி பொறியாளா் அருண் ராஜ், தற்போது பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். அவரிடம் விபத்து தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அருண் ராஜ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இத்துடன் இந்தக் கட்டடப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி இனிவரும் காலங்களில் பணிகள் ஏதும் செய்யாமல் தடுக்கும் விதமாக அவரது பெயரை கருப்புப் பட்டியலில் சோ்த்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பள்ளியில் நிகழ்ந்த இவ்விபத்து தொடா்பாக தகவல் அறிந்த ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் புதன்கிழமை காலை பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நல உதவி வழங்கி நலம் விசாரித்தாா். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தாா். அப்போது பள்ளியின் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பள்ளி தலைமை ஆசிரியா் கோரிக்கை விடுத்தாா். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதில் அதிமுக மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பூமலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com