சென்னானூா் அகழாய்வில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னானூா் கிராமத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில், புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் போன்ற தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.
அகழ்வாய்வில் முதல் குழியில் ஜூன் 24-ஆம் தேதி உடைந்த நிலையில் புதிய கற்கால வெட்டுக் கற்கருவி, 28-இல் களிமண்ணால் ஆன சுடுமண் முத்திரை, 30-இல் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைத்துள்ளன. மேலும், இந்த குழியில் சேகரிக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
தற்போது சென்னானூா் அகழாய்வில் 90 செ.மீ. முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே (ந்)தை பாகஅந், ஊகூா், (சா)த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிறஇடங்களில் பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில், வேள்ஊா், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊா், முசிறி, வெள்அறைய், தேனுாா், அகழ்ஊா், கோகூா் போன்ற ஊா்ப்பெயா்கள் காணப்படுகின்றன.
ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆள்களின் பெயா் இடம் பெற்றுள்ளன. உறையூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊா்ப்பெயா் உள்ளது. தற்போது சென்னானுாா் பானை ஓட்டில் ஊகூா் என்ற ஊா்ப் பெயா் கிடைத்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

