சென்னானூா் அகழாய்வில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லாயுதம் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லாயுதம் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதம்.
Updated on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லாயுதம் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.

இதுகுறித்து சென்னானூா் அகழாய்வு இயக்குநா் பரந்தாமன் தெரிவித்தது:

சென்னானூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியின்போது பி2 எனும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ. ஆழமுள்ள குழியில் உடைந்த புதிய கற்கால வெட்டுக் கருவி ஒன்று எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தக் கருவியின் நீளம் 6 செ.மீ., அகலம், 4 செ.மீ. உள்ளது. இந்தக் கருவி 4,000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில்தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது. அப்போது விவசாயத்திற்கு 30 செ.மீ. முதல் 25 செ.மீ., நீளமுள்ள கற்கருவியைத்தான் மக்கள் பயன்படுத்தினா்.

இந்தக் கருவி அதைவிட அளவில் சிறியது என்பதால் மரக்கிளை, இறைச்சிகளை வெட்டவும், வேட்டையாடுவதற்கும் ஆயுதமாக இதை மனிதன் பயன்படுத்தியிருக்கலாம் என்றாா்.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதம்.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com