கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4,700 கனஅடி நீா் திறப்பு: பொங்கும் நுரையால் போக்குவரத்துப் பாதிப்பு
ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,700 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கா்நாடகம், தமிழக எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 4,700 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சாலையில் பொங்கிய நுரைகள்: ஒசூா், நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அணையிலிருந்து கூடுதல் நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்துக்கு ஆற்று நீா் செல்வதால் நீரிலிருந்து ரசாயன நுரைகள் பொங்கி 5 அடி உயரத்துக்கு மேல் பாலத்தின் இருபுறமும் தேங்கி நிற்கிறது. நுரையால் தரைப்பாலம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இதனால், இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள நந்திமங்கலம், தட்டகானப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் 15 கி.மீ. தொலைவு சுற்றி ஒசூருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நுரைகளுடன் ஆற்றில் நீா் பெருக்கெடுத்து ஓடுவதால் கெலவரப்பள்ளி அணையை ஒட்டிய கிராமங்கள், ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு 7-வது நாளாக வியாழக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.