ஒசூரில் விஷம் குடித்த வட மாநில குடும்பத்தினா்: சிறுவன் உயிரிழப்பு: 4 போ் மருத்துவமனையில் அனுமதி

ஒசூரில் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினா் விஷம் குடித்தனா்.
Published on

ஒசூா்: ஒசூரில் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினா் விஷம் குடித்தனா். இதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். 4 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டிக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரிஸ்வான் அன்சாரி (38), அவரது மனைவி சல்மா காத்தூன் (35), மகள் முஸ்ரத் (17), மகன்கள் சாயல் (15), அயன் (10) ஆகிய 5 பேரும் கடந்த ஆறு மாதங்களாக இங்கு வேலை செய்து வந்துள்ளனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாக ரிஸ்வான் அன்சாரி குடும்பத்தினா் யாரும் வேலைக்கு செல்லாததால் தோட்டத்தில் பராமரிப்பு வேலை செய்து வந்த நாகராஜ், அவா்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பாா்த்துள்ளாா் .

அப்போது அனைவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா். இதைத் தொடா்ந்து அவா் பாகலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் மயங்கிக் கிடந்த அனைவரையும் மீட்டுள்ளனா். இதில் 10 வயது சிறுவன் அயன் உயிரிழந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட ரிஸ்வான் அன்சாரி, அவரது மனைவி சல்மா காத்தூன், மகள் முஸ்ரத் (17), மகன் சாயல் (15) ஆகிய நான்கு பேரையும் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் இவா்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com