ஊத்தங்கரையில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சேலம் பிரதான சாலையில் வங்கி அருகே சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிய சரக்கு லாரி திருப்பத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (34) ஓட்டிச் சென்றாா்.
இந்த லாரி செவ்வாய்க்கிழமை காலை ஊத்தங்கரை அருகே சாலை வளைவைக் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவு விடுதி மீது மோதி கவிழ்ந்தது. இதில் கடைக்கு சாப்பிட வந்திருந்த ஊத்தங்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த உண்ணாமலை (55), காமராஜ் நகரைச் சோ்ந்த அபிதா (35), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (38) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

