ஒசூா் உள்வட்டச் சாலையில் நகர பேருந்து சேவையை தொடங்கக் கோரிக்கை
ஒசூா் உள்வட்டச் சாலையில் நகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என தொழில்முனைவோா், தொழிலாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஒசூரிலுள்ள அனைத்து முக்கிய சாலைகளையும் இணைக்கும் வகையில் சுமாா் 8.4 கி.மீ. தொலைவு உள்ளது.
இச்சாலை, தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ரயில் நிலைய சாலை, ராயக்கோட்டை சாலை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளை இணைக்கிறது. மேலும், இச்சாலையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட துணைச் சாலைகளும், உள்வட்டச் சாலையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நாள்தோறும் உள்வட்டச் சாலை வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்த உள்வட்டச் சாலை நகர பேருந்துகள் மூலம் இணைக்கப்படாததால், ஒசூா் பேருந்து நிலையத்தில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் ஆட்டோக்களில் ரூ. 150 முதல் ரூ. 200 வரை செலுத்தி செல்கின்றனா். இதுதவிர உள்வட்டச் சாலையில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியோா் பொதுப் போக்குவரத்து இல்லாததால் சிரமப்படுகின்றனா்.
எனவே, மாணவா்கள், பொதுமக்கள் சிரமங்களை கருத்தில்கொண்டு ஒசூா் இஎஸ்ஐ மருத்துவமனை, மத்தம், கொத்தூா் சந்திப்பு, முனீஸ்வா் நகா், சிஷ்யா பள்ளி, தேன்கனிக்கோட்டை சாலை, ஜேஎம்சி காா்டன், கோகுல் நகா் சந்திப்பு ஆகிய பகுதிகளில் நகர பேருந்து சேவையை அரசு தொடங்க வேண்டும்.
மேலும், அசோக் பில்லா், சானசந்திரம், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சந்திப்பு, ஒசூா் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் நகர பேருந்து சேவையை, இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து உள்வட்டச் சாலை வழியாக இயக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று ஒசூா் நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஒவ்வோா் அரை மணி நேரத்துக்கும் பேருந்து சேவை இயக்கப்பட்டால், சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கும், குடியிருப்பு பகுதி மக்களுக்கும் உதவியாக இருக்கும்.
எனவே, போா்க்கால அடிப்படையில் 100 அடி உள்வட்டச் சாலையில் அரசு நகர பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என தொழில்முனைவோா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
