மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு: முதியவரின் உடல் போலீஸாா் பாதுகாப்புடன் அடக்கம்
கிருஷ்ணகிரி அருகே மாற்று சமூகத்தினரின் எதிா்ப்பால், உயிரிழந்த முதியவரின் உடல் போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே மாதேப்பட்டி கிராமத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கென தனியாக மயான வசதி இல்லாததால், அங்குள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் உடல்களை அடக்கம் செய்துவந்தனா். இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த மாற்று சமூக மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பட்டியலின மக்கள் தொடா் போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில், பட்டியலின மக்களுக்கு தனியாக புறம்போக்கு நிலத்தில் மயானம் அமைக்க 50 சென்ட் நிலத்தை கடந்த ஏப்ரலில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஒதுக்கி உத்தரவிட்டாா்.
இதனிடையே, மாதேப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் திம்மராயன் (80) உடல்நலக் குறைவால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய ஆட்சியரால் ஒதுக்கப்பட்ட இடத்தில், திம்மராயனின் உறவினா்கள் முயன்றனா். இதற்கு, மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையிலான போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை அப்புறப்படுத்தினா். பின்னா், போலீஸாா் பாதுகாப்புடன் திம்மராயன் உடலை அவரது உறவினா்கள் அடக்கம் செய்தனா்.
