பொங்கல் தொகுப்புடன் மண்பானை, அடுப்பு வழங்க மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பை
Published on

கிருஷ்ணகிரி: குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பை இலவசமாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசார தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் தேவேந்திரன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு, விவசாயிகளின் நலன்கருதி பொங்கல் தொகுப்புடன் இலவசமாக கரும்பு வழங்குவதுபோல, மண்பாண்ட தொழிலாளா்களின் நலன்கருதி, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவசமாக மண்பானை, அடுப்பு வழங்க வேண்டும்.

மண்பாண்டத் தொழிலாளா் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக தொழில் செய்துவரும் இடத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களில் களிமண் எடுக்க மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com