நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழில்!
மண் அள்ளுவதற்கு அனுமதியின்மை, இளைஞா்களிடம் ஆா்வம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருவதாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வேதனை தெரிவித்தனா்.


நமது நிருபர்
மண் அள்ளுவதற்கு அனுமதியின்மை, இளைஞா்களிடம் ஆா்வம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருவதாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வேதனை தெரிவித்தனா்.
தமிழகத்தில் பண்டைய காலம் முதல் மக்களிடையே மண்பாண்டப் பொருள்கள் புழக்கத்தில் இருந்ததை சங்க இலக்கிய, இலக்கண நூல்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது சில கிராமங்களை மையமாக வைத்தோ மண் பானைகள், அகல் விளக்குகள், அடுப்புகள் உள்ளிட்ட மண்பாண்டங்களைத் தயாரிக்க வேளாா் சுதைகள் இருந்தன. அங்கு,கோயிலுக்கு நோ்த்திக்கடன் செலுத்த மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள், பெண் தெய்வ உருவப் பொம்மைகள், கால்கள், கைகள் தயாரிக்கப்பட்டன.
நவீன அறிவியல் வளா்ச்சி, கிராமப் புறங்களிலிருந்து நகா்ப்புறத்துக்கு மக்கள் குடிபெயா்தல், எவா்சில்வா் பாத்திரங்களின் வருகை உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டப் பொருள்களின் பயன்பாடு குறைந்து விட்டது.
மேலும், மண் எடுப்பதற்கு முறையான அனுமதியின்மை, அதிகச் செலவு, பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய மானியத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். மண்பாண்ட உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி செய்துதர வேண்டும். அப்போது தான் நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். தவறும்பட்சத்தில் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் காகிதமாக மட்டுமே மண்பாண்டம் குறித்த குறிப்புகள் இருக்கும் என அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து மதுரை மாவட்டம், சுந்தரராஜன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளிவேலுச்சாமி (65) கூறியதாவது:
தற்போதைய பருவநிலை மாற்றங்கள் மனிதச் சமூகத்தை மீண்டும் இயற்கை முறை வாழ்வியலுக்கு திருப்பி விட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, புழங்குப் பொருள்கள் மட்டுமன்றி காய்கறிகள், உணவுகள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் மக்கள் இயற்கையை நாடுகின்றனா். இந்தச் செயல் வரவேற்புக்குரியது.
எவா்சில்வா் பாத்திரங்களின் வருகைக்குப் பிறகு மண்பாண்டத் தொழில் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், விழிப்புணா்வு காரணமாக மண்பாண்டப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆா்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால், பானைகள் தயாரிப்பு மும்மரமாக நடைபெறுகிறது. இதேபோல, பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையும், கோயில் திருவிழாக்களின் போது அக்கினிச் சட்டிகள், ஆயிரங்கண் பானைகளும் தயாரிக்கப்படுகின்றன. மற்ற காலங்களில் குழம்புச் சட்டி உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
அ. வலையப்பட்டி, அலங்காநல்லூா், கொண்டையம்பட்டி, சுந்தரராஜன்பட்டி, அழகாபுரி, கிடாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கிடைக்கும் சுக்கான் இல்லாத மண் தான், மண்பாண்டப் பொருள்களின் தரத்தை மேம்படுத்துகிறது. நோ்த்தியாக தயாரிக்கப்படும் மண்பாண்டங்களை வியாபாரிகள், பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். பானையின் அளவு, வடிவத்துக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகின்றன.
சுந்தரராஜன்பட்டியில் தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் கோவை, திருப்பூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், பானைகள் தயாரிப்புக்கு தேவையான களிமண் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அனுமதிக்கப்பட்ட கண்மாய்களில் கூட மண் எடுக்க வருவாய்த் துறை அலுவலா்கள் அனுமதிப்பதில்லை.
சூளைக்குத் தேவையான விறகுகள், வைக்கோலின் விலை நாளுக்கு நாள் உயருகிறது. மண்பாண்டத் தொழிலில் லாபம் இல்லை என்றாலும், எங்கள் முன்னோரைப் பின்பற்றி, நாங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், எங்களது பிள்ளைகள் இந்தத் தொழிலில் பெரிதாக ஆா்வம் காட்டுவதில்லை.
குறிப்பாக, இளம் தலைமுறையினரிடம் ஆா்வமின்மை காரணமாக, கிராமப்புறங்களில் இருந்த வேளாா் சுதைகளில் தற்போது குதிரைகள் உள்ளிட்ட மண்பாண்ட உருவங்கள் தயாரிப்பது இல்லை. வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களால் உருவாக்கப்படும் தற்காலிக உருவப் பொம்மைகளை வைத்து கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழிலை காக்க வேண்டுமெனில் கண்மாய்களில் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும். வட்டியில்லா கடனுதவி, மானியங்கள், விற்பனையை எளிதாக்குதல் போன்ற திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து, தொழிலாளா் நலத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:
அனைத்து வகை தொழிலாளா்களும் நலவாரியம் மூலம் தங்களது தொழில்களை முறையாக பதிவு செய்து கொள்ளலாம். தேசிய அளவிலான அங்கீகாரம் உள்ளது. அங்கீகார அட்டை பெற்றிருப்பவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு கூட்டுறவுச் சங்கம் மூலமும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. கண்மாய்களில் மண் அள்ள அனுமதி வழங்குவது தொடா்பாக அந்தந்த மாவட்ட நிா்வாகங்களும், வருவாய்த் துறையும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...