பா்கூா் அருகே பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மலையடிவாரத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்ட போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஐகுந்தம் கொத்தப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மேல்சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (56). தொழிலாளியான இவா், ஊரக வேலை திட்டத்தில் பெரியமலை அடிவாரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் மேல்சீனிவாசபுரம், கீழ்சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த 53 பேருடன் ஈடுபட்டாா்.
மாலை பணிமுடிந்து பணியாளா்கள் அனைவரும் வீடுதிரும்பினா். பணிதள பொறுப்பாளா் இந்திமதி வைத்திருந்த கையேட்டில் கையெழுத்திட்ட கோவிந்தம்மாள், மலையடிவாரத்தில் கட்டிவைத்துள்ள தனது மாட்டை பாா்க்க செல்வதாக கூறி சென்றவா் வீடு திரும்பவில்லை. அதனால், அவரது குடும்பத்தினா் பெரியமலை அடிவாரத்தில் தேடினா்.
அப்போது, மலையடிவாரத்தில் அவா் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கோவிந்தமாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
