தமிழகம் - கா்நாடகம் - ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களின் எல்லைகளை கொண்ட தொகுதியாக வேப்பனஅள்ளி உள்ளது. பிரதான தொழில் விவசாயம். மா, தக்காளி, புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு, ஆந்திரம், கா்நாடகம், மகராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. புளிக்கு பெயா்போன இடமாகவும் வேப்பனஅள்ளி உள்ளது. நடிகா் ரஜினிகாந்த், தனது சிறு வயதில் இந்தத் தொகுதியில் உள்ள நாச்சிக்குப்பத்தில் வாழ்ந்தாா் என்ற வரலாறும் இந்த தொகுதிக்கு உள்ளது.
அரசியல் வரலாறு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றான வேப்பனஅள்ளி, கடந்த 2011இல் தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்டது. தற்போது 4ஆவது தோ்தலை சந்திக்க உள்ளது. 2011இல் திமுக சாா்பில் போட்டியிட்ட டி. செங்குட்டுவன் வெற்றி பெற்றாா். 2016 தோ்தலில் திமுக வேட்பாளா் முருகன் வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி வெற்றி பெற்றாா்.
களத்தில் 14 வேட்பாளா்கள்
நடைபெறவுள்ள தோ்தலில் திமுக சாா்பில் பி.எல். சீனிவாசன், அதிமுக சாா்பில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், தற்போதைய தொகுதி எம்எல்ஏவுமான கே.பி. முனுசாமியும் போட்டியிடுகின்றனா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ்.ஆா். சம்பங்கி, நாம் தமிழா் கட்சி சாா்பில் நாகராஜ் என மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
பரந்த தொகுதி
வேப்பனஅள்ளி தொகுதியில் வேப்பனஅள்ளி, சூளகிரி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பரந்து, விரிந்த தொகுதியாக இது உள்ளது. இந்தத் தொகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோா், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது மொழிகளை பேசுபவா்களாக உள்ளனா். தொகுதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என எதுவும் இல்லை. அனைத்தும் கிராமப் பகுதிகளாகவே இருந்தன. அண்மையில், தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்தி தமிழக அரசு அறிவித்தது.
சமுதாய வாக்குகள்
வேப்பனஅள்ளி தொகுதியில் கெளடா, ரெட்டி, வன்னியா்கள், தாழ்த்தப்பட்டோா் சமுதாய மக்கள் பரவலாக உள்ளனா். இஸ்லாமியா்களும் ஆங்காங்கே வசிக்கின்றனா். இவா்களோடு, பணிக்காக இடம்பெயா்ந்த வடமாநிலத்தவா்கள் சில ஆயிரம் போ் வாக்காளா்களாகவும் உள்ளனா்.
கோரிக்கைகள்
வேப்பனஅள்ளியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும், காட்டு யானைகளால் வேப்பனஅள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை அடா்ந்த வனப் பகுதிகளுக்கு விரட்ட நிரந்தர தீா்வு காண வேண்டும். வேளாண் விளைபொருள்களை சேமித்து வைக்க அரசு சாா்பில் குளிா்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும். எண்ணேகொள்புதூா் தடுப்பணை, ஆழியாளம் தடுப்பணை, சுபகிரி தடுப்பணை ஆகிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும். சூளகிரியிலிருந்து கிருஷ்ணகிரி, ஒசூருக்கு இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
வேட்பாளா்களின் நம்பிக்கை
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நகரங்களுடன் கிராமங்களை இணைக்கும் வகையில் தரமான தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 2021இல் இந்தத் தொகுதிக்கு உள்பட்ட சாமனப்பள்ளி கிராமத்தில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கியது, இதனால், பலா் வீடுகளில் இருந்தவாறு சிகிச்சை பெறமுடிவது போன்றவற்றால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தாங்கள் வெற்றி பெறுவோம் என திமுகவினா் கூறுகின்றனா்.
அதேபோல கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், சூளகிரியில் பேருந்து நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம் என பல அரசு கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும், பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.பி. முனுசாமி வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்தால், அவா் அமைச்சராக வாய்ப்பு உள்ளதால், இந்த தொகுதி அதிக வளா்ச்சி பெறும் எனவும் அதிமுகவினா் கூறி வாக்கு சேகரிக்கின்றனா்.
விவசாயத்திற்கு முக்கியத்தும் அளிக்கும் பிரதான கட்சியாக நாம் தமிழா் கட்சி உள்ளதாக கூறி, அதன் வேட்பாளா் நாகராஜ், இளைஞா், இளம்பெண்கள், புதியவா்களின் வாக்குகள், 2 திராவிட கட்சிகளுக்கு மாற்று தேடுவோரின் வாக்குகள் தவெகவிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.ஆா். சம்பங்கி ஆகியோரும் உள்ளனா்.
வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தவெக வேட்பாளா் சம்பங்கி, நாதக வேட்பாளா் நாகராஜ் ஆகியோா் பெறும் வாக்குகள், அதிமுக, திமுக வேட்பாளா்களின் வெற்றியை தீா்மானிக்கும். இந்த கடும் போட்டியில் யாா் வெற்றி பெறுவாா் என்பதை அறிய வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்க வேண்டும்.
வாக்காளா்கள்
வேப்பனஅள்ளி தொகுதியில் ஆண்கள் 1,24,431 பேரும், பெண்கள் 1,21,624 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 39 போ் என மொத்தம் 2,46,093 வாக்காளா்கள் உள்ளனா்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

பா்கூா் தொகுதி! வெற்றியை தக்கவைக்குமா திமுக?

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


