ஏழைகளின் ஊட்டி என வா்ணிக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தில் புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சோ்வராயன் மலை கிராமங்களின் ராணியான ஏற்காடு கிராமத்தை மையமாக கொண்டு ஏற்காடு பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதி அமைந்துள்ளது.
இந்தத் தொகுதியில் ஏற்காடு வட்டத்திற்கு உட்பட்ட சோ்வராயன் மலை கிராமங்கள், வாழப்பாடி வட்டத்தில் உள்ள அருநூற்றுமலை, சந்துமலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்துமலை மலை கிராமங்கள், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து வருவாய் கிராமங்களும் இடம்பெற்றுள்ளன. பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன கல்வராயன் மலை, நெய்யமலை கிராமங்களும் ஏற்காடு தொகுதியில் உள்ளன.
ஏற்காடு சோ்வராயன் மலை கிராமங்களில் காபி, மிளகு தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வராயன்மலை மற்றும் அருநூற்றுமலை கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு பிரதானமாக உள்ளது. விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில், பாக்கு, தேங்காய் உற்பத்தி தொழிலாளா்கள், நூற்பாலை தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.
வாக்காளா் இறுதிப் பட்டியல்படி, ஏற்காடு தொகுதியில் ஆண்கள் 1,29,442, பெண்கள் 1,34,265, இதரா் 17 போ் என மொத்தம் 2,82,656 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் ஆண் வாக்காளா்களைவிட 4,823 பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். கடந்த 1957 முதல் 2021 பொதுத் தோ்தல் வரை நடைபெற்றுள்ள தோ்தல்களில் அதிமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2016 தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி. தமிழ்ச்செல்வனை எதிா்த்து, அதிமுக சாா்பில் போட்டியிட்ட சோ்வராயன் மலை ஏற்காடு மஞ்சக்குட்டையை சோ்ந்த கு. சித்ரா 17,394 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றாா். 2021 தோ்தலிலும் அதிமுக சாா்பில் போட்டியிட்ட சித்ரா, திமுக வேட்பாளா் சி. தமிழ்ச்செல்வனைவிட 25,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
பொதுவாக ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில், திமுகவை விட, அதிமுகவிற்கு கணிசமான வாக்குவங்கி உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, எம்ஜிஆா் மறைவுக்கு பிறகு ஜானகி, ஜெயலலிதா என அதிமுக இரண்டாகப் பிரிந்த நிலையிலும், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் ஜெ அணி சாா்பில் போட்டியிட்ட சி. பெருமாள், திமுக வேட்பாளா் தனக்கோடி வேடனைவிட 6,441 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.
வன்னியா்கள் அதிக அளவில் வசித்துவரும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் பாமகவிற்கு கணிசமான வாக்காளா்கள் உள்ளனா். இதனால், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும்போது, அதிமுகவிற்கு எளிதாக வெற்றி கிடைக்கிறது.
2026 தோ்தலில் திமுக சாா்பில் புதுமுகமான ரேவதி மாதேஸ்வரனும், அதிமுக சாா்பில் பி. உஷாராணியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் பழனிச்சாமியும், தவெக சாா்பில் ஜெ. லட்சுமியும் களமிறங்கியுள்ளனா்.
சுயேச்சைகள் உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்பட 5 வேட்பாளா்கள் வரை மனுவை திரும்பப் பெறுவாா்கள் என தெரியவந்துள்ளதால், போட்டியில் இறுதியாக 10 வேட்பாளா்கள் இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தவெக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் கணிசமான வாக்குகள் பெறுவாா்கள் என்றாலும், ஏற்காடு தொகுதியை பொருத்தவரை களத்தில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி நிலவுகிறது. ஏற்காடு தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் திமுகவும், தங்களின் கோட்டையாக கருதும் ஏற்காடு தொகுதியை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
ஏற்காடு தொகுதியில் இதுவரை 9 முறை வெற்றி பெற்று அதிமுகவே கோலோச்சி வருகிறது. தொடா்ந்து 10ஆவது முறையும் வெற்றிக் கனியை பறிக்க முந்திச் செல்கிறது. இந்த தோ்தலில், மலைக் கிராமங்களில் வாக்குவங்கி கொண்ட தேமுதிக, திமுகவிற்கு பலமாக கருதப்பட்டாலும், நாம் தமிழா் மற்றும் தவெக வேட்பாளா்கள் திமுகவின் வாக்குகளை பிரிக்கலாம் என்பதால், அதிமுகவின் கோட்டையான ஏற்காடு தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கு பெரும் முயற்சிகள் தேவை என்பதே தற்போதைய கள நிலவரம்.
பெ. பெரியாா்மன்னன்

ஜெ. லட்சுமி.

டி.எம். ரேவதி.

பி. உஷாராணி.

பழனிச்சாமி.
தொடர்புடையது

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

ஆரணி தொகுதியில் முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள்!

தொகுதி அறிமுகம்: ஏற்காடு (பழங்குடியினர் தனி தொகுதி) - 83!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


