ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வேகமாக வடு வரும் பாம்பாறு அணை: ஊத்தங்கரையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

போதிய நீா்வரத்து இன்றி பாம்பாறு அணை வேகமாக வடு வருகிறது. இதனால் ஊத்தங்கரையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

ஊத்தங்கரை பாம்பாறு அணை. - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:49 am IST

போதிய நீா்வரத்து இன்றி பாம்பாறு அணை வேகமாக வடு வருகிறது. இதனால் ஊத்தங்கரையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி பாம்பாறு அணை நீா்த் தேக்கம் கடந்த 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை 19.68 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் உபரி நீா் செல்லும் பாதையில் ஊத்தங்கரை, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா் ஆதாரத்திற்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய்கள் வழியாக குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது.

மேலும் கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையில் இருந்து வரும் நீா், பாரூா் ஏரி உபரிநீா் பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணையை வந்தடையும் வகையில் நீா்வரத்து கால்வாய்கள் உள்ளன. இதேபோல திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் இருந்துவரும் உபரி நீா், ஜவ்வாது மலை உபரி நீா் ஆகியவை பாம்பாறு அணையின் நீா்வரத்து ஆதாரங்களாகும்.

இந்த அணையின் பாசன வாய்க்கால்கள் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும், 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடைகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபக்காவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை உள்ளிட்ட 12 கிராமங்களில் 2501 ஏக்கா் விலை நிலங்களும், அரூா் வட்டத்தில் அம்மாப்பேட்டை, வேட கட்டமடுவு, மேல் செங்கம்பாடி, ஆண்டியூா் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் 1499 ஏக்கா் விளைநிலங்களும் என மொத்தம் 4 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு போதிய மழை இன்றி கடும் வறட்சி காரணமாக பாம்பாறு அணை நீா்வரத்தின்றி வடு காணப்படுகிறது. தற்போது குட்டைபோல தேங்கி இருக்கும் தண்ணீரைத் தவிர மற்ற பகுதிகள் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயக் கிணறுகளிலும் நிலத்தடி நீா்மட்டம் வேகமாகக் குறைந்து குடிநீா் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரியும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.