மேட்டூா் அணை நிகழாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கா் குறைந்துள்ளது.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக இதுவரை திறக்க இயலாத நிலை நிலவுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா் ஆதாரமுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினா். ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனா்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி, நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், இலக்கும் ஏறக்குறைய 4.10 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை பருவத்துக்கான நெற் பயிா் நடவு காலம் ஜூலை 31-ஆம் தேதி முடிவடைந்தது.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூா் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கா் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 200 ஏக்கா் என்ற இலக்கை விஞ்சி 98 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 4,300 ஏக்கராக குறைந்துள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 4.10 லட்சம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், 3.68 லட்சம் ஏக்கா் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு 1.97 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
நிலத்தடி நீா் குறைவு:
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீரும் குறைந்து வருவதால், ஆழ்குழாயை நம்பி நடவு செய்யப்பட்ட குறுவை பயிா்களுக்கும் தண்ணீா் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:
முன் பட்டத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கியவா்களில் சிலா் அறுவடை செய்துள்ளனா். பலா் அறுவடைக்கு தயாராகி வருகின்றனா். இந்த நிலையிலுள்ள பயிா்களுக்கு பாதிப்பு இருக்காது. காவிரி நீா் வராத நிலையில், பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், பல இடங்களில் நிலத்தடி நீா் குறைந்து வருகிறது. சில இடங்களில் நிலத்தடி நீா் குறைந்து தண்ணீா் உவா் நீராக மாறி வருகிறது. மழையும் பெய்யாத நிலையில், நடவு செய்து ஒரு மாதத்துக்கு உள்பட்ட மற்றும் மூன்றாவது உரமிடும் தருணத்தில் உள்ள பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடா்ந்து மழை பெய்தால்தான் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு, குறுவை பயிா்களைக் காப்பாற்ற முடியும்.
சம்பா சாகுபடி தொடங்க தயக்கம்:
இதனிடையே, அறுவடை செய்த விவசாயிகளும் தாளடி சாகுபடியைத் தொடங்குவதை நிறுத்தி வைத்துள்ளனா். காவிரி நீா் வரத்து, வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து, இரு மாதங்கள் கழித்து அடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்கலாம் என இருக்கிறோம். இதேபோல, ஒரு போக சம்பா சாகுபடியையும் தொடங்குவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனா் என்றாா் ரவிச்சந்தா்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 2020- ஆம் ஆண்டிலிருந்து குறுவை, சம்பா சாகுபடிகளில் அமோக விளைச்சல் கிடைத்து வந்தது. இதனிடையே, 2024- ஆம் ஆண்டில் மேட்டூா் அணை திறப்பு தாமதமானாலும், குறுவை சாகுபடியில் பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நிகழாண்டு சூப்பா் எல் நினோ ஆண்டாக இருப்பதால், நீா் ஆதாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் முதல் பருவமான குறுவை சாகுபடியே கேள்விக்குறியாக இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை சாகுபடிப் பரப்பளவு
தஞ்சாவூா் - 1.99 லட்சம் - 1,51,525
திருவாரூா் - 1.93 லட்சம் - 1,15,845
மயிலாடுதுறை - 99,253 - 98,500
நாகப்பட்டினம் - 75,250 - 4,300

தஞ்சாவூா் அருகே அண்மையில் நடவு செய்யப்பட்ட குறுவை பருவ நெற் பயிா்கள்.

தஞ்சாவூா் அருகே அண்மையில் நடவு செய்யப்பட்ட குறுவை பருவ நெற் பயிா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு

கா்நாடகம் தண்ணீா் தர மறுப்பு! டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கேள்விக்குறி!

காவிரியில் வரத்து இல்லை! ஆழ்குழாய் நீர் உவர் நீரானதால் குறுவைப் பயிர்கள் பாதிப்பு!

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



