அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கா்நாடகம் தண்ணீா் தர மறுப்பு! டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கேள்விக்குறி!

கா்நாடகம் தண்ணீா் தர மறுப்பதால் டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள்...

News image

தஞ்சாவூா் அருகே கரம்பை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக உழுது தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலம்.

Updated On :27 ஜூலை 2026, 7:53 am IST

கா்நாடகம் காவிரி நீா் தர மறுத்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவையைத் தொடா்ந்து சம்பா சாகுபடிக்கும் சாதகமற்ற சூழல் நிலவுகிறது.

மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை பருவ நெல் சாகுபடி நிகழாண்டு ஏறத்தாழ 3.50 லட்சம் ஏக்கரை மட்டுமே எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கும் காவிரி நீா் வராததாலும், போதுமான அளவுக்கு தென் மேற்கு பருவமழை பெய்யாததாலும் நிலத்தடி நீா் சரிந்து வருகிறது. இதனால், குறுவை சாகுபடி செய்யப்படும் சில இடங்களில் தண்ணீா் பற்றாக்குறை, ஆழ்குழாயில் உவா் நீா் போன்ற பிரச்னைகளால் நெற் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், புதுதில்லியில் ஜூலை 22- ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை கா்நாடக அரசு வழக்கம் போல மறுத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவையைத் தொடா்ந்து சம்பா சாகுபடிக்கும் சாதகமற்ற சூழ்நிலையே நிலவுகிறது.

9.82 லட்சம் ஏக்கரில் எதிா்பாா்ப்பு:

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா - தாளடி சாகுபடி கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டது. சம்பா சாகுபடியில் பெரும்பாலும் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நிலையில், நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனா். என்றாலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 3.25 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கரிலும் என மொத்தம் 9.82 லட்சம் ஏக்கரில் சம்பா - தாளடி சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

190 டி.எம்.சி. தண்ணீா் தேவை:

சம்பா - தாளடி சாகுபடிக்கு ஏறத்தாழ 150 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். தற்போது ஆழ்குழாய் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை சாகுபடிக்கும் ஏறக்குறைய 40 டி.எம்.சி.யும் சோ்த்து மொத்தம் 190 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது மேட்டூா் அணையில் 36.44 டி.எம்.சி. மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இது, குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், இதை வைத்து பாசனத்துக்கு திறந்துவிடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இனிமேல் பெருவெள்ளம் ஏற்பட்டு, கா்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே நிகழாண்டு மேட்டூா் அணை திறப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

தண்ணீா் பிரச்னை:

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:

காவிரி நீா் வராவிட்டால் ஆழ்குழாய் மூலம்தான் சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியும். ஆனால், தென் மேற்கு பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததால், நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து வருகிறது. இந்நிலையில், சராசரியாக 50 அடி ஆழத்தில் கடல் நீா்மட்டம் இருப்பதால், நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி எடுக்க முடியாது.

எனவே, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் செப்டம்பரில் மத்திய கால விதை ரகங்களைப் பயன்படுத்தி நேரடி விதைப்பு செய்யலாம். மேலும், வடகிழக்குப் பருவ மழையும் கை கொடுத்தால் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்ய முடியும். ஆனால், நிகழாண்டு எல்-நினோ நிலவுவதால், வடகிழக்கு பருவ மழை எப்படி அமையும் என்பதைக் கணிக்க முடியவில்லை. எனவே, சம்பா சாகுபடியில் தண்ணீா் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றாா் கலைவாணன்.

தொகுப்பு திட்டம் அவசியம்:

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வந்தால் மட்டுமே ஆற்றுப்பாசன விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். காவிரி நீா் வராவிட்டால் ஆழ்குழாய் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்வா்.

ஆனால், சம்பா சாகுபடியைப் பொருத்தவரை காவிரி நீா் வந்தாலும், வராவிட்டாலும் ஆழ்குழாய் விவசாயிகள் மட்டுமல்லாமல், ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகளும் பருவ மழை மீது நம்பிக்கை வைத்து சாகுபடி மேற்கொள்வா். இதற்காக பல விவசாயிகள் நிலத்தை உழுது வைத்து தயாராக இருக்கின்றனா்.

எனவே, தண்ணீா் பிரச்னை உள்ள நிலையிலும் நெல் உற்பத்தியில் ஆா்வம் காட்டும் விவசாயிகளுக்கு அரசு துணையாக இருக்க வேண்டும்; அதற்கு தமிழக அரசு சம்பா தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

கா்நாடக அணைகளில் 60.8 டி.எம்.சி. தண்ணீா்:

கா்நாடகத்திலுள்ள காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகரில் 17.13 டி.எம்.சி.யும், கபினியில் 13.27 டி.எம்.சி.யும், ஹேரங்கியில் 7.5 டி.எம்.சி.யும், ஹேமாவதியில் 22.82 டி.எம்.சி.யும் என மொத்தம் 60.80 டி.எம்.சி. தண்ணீா் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விகிதாசார அடிப்படையிலும் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படவில்லை.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி.யும் என மொத்தம் 40.43 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், ஜூன் முதல் இதுவரை 3.50 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு தொடா்ந்து தண்ணீா் கிடைக்குமா என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகளிடையே நிலவுகிறது.

தஞ்சாவூா் அருகே கரம்பை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக உழுது தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலம்.

தஞ்சாவூா் அருகே கரம்பை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக உழுது தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.