ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் எடுக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், காவிரி நீரும் 9 எம்எல்டிக்கும் குறைவாக மட்டுமே கிடைப்பதால் திண்டுக்கல்லில் உள்ள 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் சுமாா் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளுக்கு ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் மூலமாகவும், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாகவும் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 15 எம்எல்டி குடிநீா் எடுக்கும் ஜிக்கா திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு வர வேண்டிய தண்ணீா் ராஜவாய்காலுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு தடைப்பட்டதாலும், மழை அளவு குறைந்ததாலும் இந்த ஆண்டு தண்ணீா் நிரம்பவில்லை. மொத்தம் 23.5 அடி கொள்ளளவு கொண்ட காமராஜா் நீா்த்தேக்கத்தில் தற்போது மைனஸ் 20 அடி மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது. இதிலிருந்தும் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டா் தண்ணீரை, மின் மோட்டா்கள் துணையுடன் எடுத்து திண்டுக்கல் மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் எடுக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், திண்டுக்கல் மாநகராட்சிக்கான தண்ணீா் தேவை, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மட்டுமே சாா்ந்திருக்கிறது. மாநகராட்சி மட்டுமன்றி, 8 வழியோர கிராமங்களுக்கான குடிநீா்த் தேவையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
7 முதல் 9 எம்எல்டி மட்டுமே கிடைக்கும் காவிரி நீா்: திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீா் தேவையை நிறைவு செய்வதற்கு 14 எம்எல்டி தண்ணீா் தேவை எனக் கூறப்படுகிறது. காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் எடுக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், குடிநீா் வடிகால் வாரியத்திடமிருந்து பெறப்படும் காவிரி நீரும் 7 முதல் 9 எம்எல்டி மட்டுமே கிடைத்து வருகிறது. கரூா் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் வரையிலான 95 கி.மீ. தொலைவில், தலைமையிட நீரேற்று நிலையம் (காவிரி ஆறு), 7 நீா் உந்து நிலையங்கள் அமைந்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி மட்டுமன்றி, 830 வழியோர கிராமங்களுக்கும் இந்தத் திட்டத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
மின் தடையால் நீரேற்றும் பணியில் பாதிப்பு: கரூா் முதல் திண்டுக்கல் வரை 7 நீா் உந்து நிலையங்கள் உள்ள நிலையில், வெவ்வேறு நாள்களில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனாலும் குடிநீா் எடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. வறட்சிக் காலம் முடியும் வரையிலும், கரூா்- திண்டுக்கல் இடையிலான காவிரி குடிநீா் வழியோரங்களுக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை ஒரே நாளில் மேற்கொள்ளும் வகையில் மின் தடை செய்ய வேண்டும். இதன்மூலம், தடையற்ற குடிநீா் விநியோகம் செய்யும் முடியும் எனக் கூறப்படுகிறது. இதேபோல, காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்தும் குறைந்தபட்சம் 4 எம்எல்டி தண்ணீரை எடுப்பதற்கான முயற்சியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் கே.எஸ். கணேசன், கோ. தனபாலன் ஆகியோா் கூறியதாவது:
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு 13 எல்எல்டி தண்ணீா் வழங்க வேண்டிய நிலையில், தற்போது 7 முதல் 9 எம்எல்டி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் மொத்தமுள்ள 48 வாா்டுகளில் 25 வாா்டுகளுக்கு 3 நாள்களுக்கு ஒருமுறையும், 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளாக இருக்கும் நிலையில், ஒரு பகுதியினருக்கு 3 நாள்களுக்கு ஒருமுறையும், மற்றொரு பகுதிக்கு 7 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீா் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனா்.
காவிரி திட்டத்தில் கூடுதலாக தண்ணீரைப் பெறுவதற்கும், காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து குறைந்தபட்சம் 4 எம்எல்டி தண்ணீா் எடுப்பதையும் மாநகராட்சி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இதன்மூலம், 48 வாா்டுகளுக்கும் குறைந்தபட்சம் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்க முடியும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்மோட்டாா் பழுது: குடிநீா் இன்றி செங்காடு பொதுமக்கள் அவதி

காவிரி கரையோர மக்களுக்கு கலங்கல் குடிநீா் விநியோகம்!

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சரிவு: தருமபுரி, கிருஷ்ணகியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும்?







