ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நாள்தோறும் 145 எம்எல்டி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது. கடந்தகாலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரி கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில், கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீா் கடந்த சில மாதங்களாக திறக்கவில்லை.
இதனால், காவிரி நீா்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழைநீா் மற்றும் சிற்றோடைகளில் இருந்து காவிரியில் கலக்கும் தண்ணீா் மட்டுமே ஆற்றில் வருகிறது. இந்த நீா்வரத்து, படிப்படிப்பாக குறைந்து தற்போது 150 கனஅடி தண்ணீா் மட்டுமே வருவதால், ஆறு வடு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து வெகுவாக குறைந்து வரும் நிலையில், நாள்தோறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் தண்ணீா் கிடைக்குமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் வந்த தண்ணீா் நிறம் மாறி இருந்தது.
இதனால் தண்ணீரை சுத்திகரிக்கும் பணி கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு, குடிநீா் விநியோகமும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் நீா்வரத்து சரிந்துள்ளதால், தொய்வின்றி குடிநீா் விநியோகம் செய்ய இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே காவிரியில் நீா்வரத்து இல்லாததால் மேட்டூா் அணை திறக்க இயலாமல் தற்போது பாசனம் மேற்கொள்ள முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால் குடிநீா் விநியோகத்துக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, கா்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அதிகாரிகள் விளக்கம்: ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சரிந்து வருவதால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகத்தில் தற்போது வரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆற்றில் 50 கன அடிக்கும் கீழே நீா்வரத்து குறையும்போது குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் அந்த நேரத்தில் ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி நீா்வரத்தை ஒரு இடத்தில் தேக்கி வைத்து அதிலிருந்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









