
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நரம்பியல், இதய அறுவை சிகிச்சை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல், இதய அறுவை சிகிச்சை துறைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி), ந.இளையராஜா (ஊத்தங்கரை), கல்லூரி முதல்வா் சத்யபாமா, மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொறுப்பு) மாரிமுத்து, உள்ளிருப்பு மருத்துவா் செல்வராஜ், நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இப்பகுதி மக்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா். மேலும், கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகளில் அதிகமான விபத்துகள் ஏற்படும் நிலையில், காயம் அடைவோரை ஆபத்தான நிலையில் தருமபுரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்கின்றனா். இந்த நிலையைப் போக்கும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா்சிகிச்சை சிறப்பு மருத்துவ பணியிடத்தை உருவாக்கி, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சை துறைகள் தொடங்கப்படும்.
மேலும், இங்குள்ள பழைய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் மகப்பேறு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போது உள்ள புதிய அரசுக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே, மகப்பேறு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வட்ட அளவிலான மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
முன்னதாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் கல்லூரி, விடுதி அமைப்பது குறித்து அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





