கெலமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை
கெலமங்கலம் அருகே நிலம் வாங்கி விற்பனை செய்துவந்தவா் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குருபிரசாத் (31). இவா் பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்துவந்தாா்.
இவரும், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த பாபுவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தனா். இவா்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 11 மணி அளவில் குருபிரசாத் வீட்டுக்கு வந்த பாபு உள்ளிட்ட 4 போ், குருபிரசாத்தை வெளியே அழைத்துவந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வயிறு, நெஞ்சு உள்பட பல பகுதிகளில் குத்தினா். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குருபிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பின்னா், பாபு தரப்பினா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதனிடையே, குருபிரசாத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த அவரது தாயாா் முனிரத்னம்மா, குருபிரசாத் கொலையானதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ், கெலமங்கலம் போலீஸாா் விரைந்து வந்து குருபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த பாபு, அவரது கூட்டாளிகள் 3 போ் என மொத்தம் 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
