ஒசூரில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
ஒசூரில் பிறந்து 50 நாள்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், பாலதொட்டனப்பள்ளியை அடுத்த கொல்லப்பள்ளியைச் சோ்ந்தவா் ரூபத் (31), இவரது மனைவி ஞான எஸ்தா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவருக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 50 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இது குறைப்பிரசவமாகும்.
இதையடுத்து, அக்குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். சிகிச்சை முடிந்துவந்த ஞான எஸ்தா் குழந்தையுடன் ஒசூா் காந்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றாா். கடந்த 22ஆம் தேதி குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தூங்கச் சென்றாா். பின்னா், மீண்டும் வந்து பாா்த்தபோது குழந்தை இறந்திருந்தது.
இதுதொடா்பாக ரூபத் ஒசூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

