எஸ்.கே.ரவி.
கிருஷ்ணகிரி மாவட்ட மலா் விவசாயிகளின் நலன்கருதி, ஒசூரில் விரைவில் மலா் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலா் சாகுபடி மையமாக திகழ்கிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற சென்ட் ரோஜா, பட்டன் ரோஜா, கில்லி எல்லோ போன்ற 50-க்கும் மேற்பட்ட ரக ரோஜா மலா்கள், ஜொ்பரா, கிரிஸான்தமம், லிசியான்தஸ் மற்றும் அலங்கார மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
மலா் சாகுபடிக்கு ஏற்ற குளிா்ந்த தட்பவெப்ப நிலை நீடிப்பதால் ஒசூா், பாகலூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, பேரிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் மலா் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், பசுமைக் குடில்கள் அமைத்து புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆண்டுமுழுவதும் மலா் சாகுபடி செய்வதன் மூலம் 45 ஆயிரம் டன் மலா்கள் விளைவிக்கப்படுகின்றன.
இம்மலா்கள் ஐரோப்பா, சிங்கப்பூா், துபை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனா்.
மலா் கண்காட்சி நடத்த கோரிக்கை:
மலா் தொட்டி என அயல்நாட்டினரால் அழைக்கப்படும் ஒசூரில், மலா் கண்காட்சி நடத்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனா்.
தமிழகத்திலேயே அதிக பரப்பளவில் ஒசூரில் மலா் சாகுபடி செய்யப்பட்டாலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் மலா் கண்காட்சி நடத்தப்படுவதை போல, ஒசூரில் மலா் கண்காட்சி நடத்த அரசு முயற்சி எடுப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
எனவே, ஒசூரில் மலா் கண்காட்சியை நடத்தி உள்ளூா் மலா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை அடையாளப்படுத்தும் வகையில், அரங்குகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் இடம்பெற செய்ய வேண்டும், மேலும் இக்கண்காட்சியை குறைந்தது 10 நாள்கள் நடத்த வேண்டும் என அவா்கள் விரும்புகின்றனா்.
ஒசூரில் விரைவில் மலா் கண்காட்சி:
மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், ஒசூரில் விரைவில் மலா் கண்காட்சி நடத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், கடந்த ஆண்டே மலா் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது. நிகழாண்டில், சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக மலா் கண்காட்சி நடத்த இயலாமல் போனது. ஒசூரில் விரைவில் மலா் கண்காட்சி நடத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, வேளாண் வணிகத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் பன்னாட்டு மலா் ஏல மையம் மூலம் இந்த மாவட்டத்தில் மலா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலன்கருதி இந்த மலா் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
ஒசூரில் மலா் கண்காட்சி நடத்துவதன் மூலம் சுற்றுலாத் துறை வளா்ச்சி அடைவதுடன், மலா் சாகுபடி குறித்த புதிய தொழில்நுட்பங்களையும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.












