/

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் முதியவா் காயம்

News image

காட்டுயானை..

Updated On :15 ஜூன் 2026, 2:36 am IST

கிருஷ்ணகிரி அருகே வனப் பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற முதியவா், காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள காட்டூரைச் சோ்ந்தவா் ராஜப்பன் (68). இவா், கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, அங்கிருந்த புதரிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை, முதியவா் ராஜப்பனை தாக்கியது. இதில் அவருக்கு இடுப்பு மற்றும் வலதுகாலில் காயமேற்பட்டது.

இந்த நிலையில், யானையின் பிளிறல் சப்தம் கேட்டு, அந்தப் பகுதிக்குச் சென்ற மக்கள், யானையின் பிடியிலிருந்து ராஜப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நகரையொட்டியுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி, வரட்டனப்பள்ளி - மகாராஜகடை சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகாராஜகடை காவல் ஆய்வாளா் சரவணன், கீழ்பூங்குருத்தி வனவா் குப்புசாமி ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியரிடம் பேசி, சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.